தமது முதல் அதிகாரத்துவ பயணமாக எகிப்துக்குச் சென்றுள்ள சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம், தடையற்ற வர்த்தக உடன்பாட்டை அந்த நாட்டுடன் செய்துகொள்வதைப் பற்றிய ஆய்வுக்கான ஒப்புதலைப் பெற்றுள்ளார்.
எகிப்திய அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசியும் அதிபர் தர்மனும் இந்த முடிவு, காலத்திற்கேற்ப செய்யப்பட்டுள்ளது என்பதை முன்மொழிந்துள்ளதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு ஞாயிற்றுக்கிழமை ( செப்டம்பர் 21) அன்று வெளியிட்ட அறிக்கையில் தெரித்தது.
அதிபர் தர்மன், நான்கு நாள் பயணமாக வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 19) தொடங்கி திங்கட்கிழமை (செப்டம்பர் 22) வரை எகிப்துக்கு சென்றுள்ளார்.
சிங்கப்பூர் இதுவரை 28 நாடுகளுடன் தடையற்ற வர்த்தக உடன்பாடுகளை செய்துகொண்டு நடைமுறைப்படுத்தி உள்ளது. வரிச் சலுகையும், சந்தைகளுக்குள் வேகமாக நுழைவதற்கும் அந்த ஒப்பந்தங்கள் வகை செய்கின்றன.
திரு தர்மன், எகிப்து தலைநகர் கைரோ சென்றுள்ள இரண்டாம் நாளில் இரு அதிபர்களும் சனிக்கிழமை (செப்டம்பர் 20) அன்று சந்தித்துக்கொண்ட பிறகு இந்த அறிவிப்பை வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ளது.
சந்திப்புக்குப் பிறகு, ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதை இருவரும் பார்வையிட்டனர். பலதரப்பட்ட துறைகளில் இரு நாடுகளும் ஒத்துழைக்க இருக்கின்றன.
சுகாதாரப் பராமரிப்பு, உணவுப் பாதுகாப்பு, சமூக சேவைகள், எனத் தங்களது உறவை வலுப்படுத்தவும் விரிவாக்கவும் அவை முற்படுகின்றன.
ஆழமான, பன்முகத் தன்மைகொண்ட பங்காளித்துவத்தின் உறுதியான வெளிப்பாடாக இந்த இருநாட்டு ஒத்துழைப்புகள் விளங்குவதாக அதிபர் தர்மன் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
எகிப்தின் பொருளாதார ஆற்றல் மீது சிங்கப்பூருக்கு நம்பிக்கை உள்ளதால், இருநாட்டு வர்த்தக ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்வதன் வழிவகைகள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியதாகச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அதிபர் தர்மன் விளக்கினார்.