அமெரிக்காவின் பால்ட்டிமோர் துறைமுகத்தில் சிங்கப்பூர்க் கப்பலான ‘மெர்ஸ்க் சல்டோரோ’வில் அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத்துறை (எஃப்பிஐ) அதிகாரிகள் செப்டம்பர் 21ஆம் தேதியன்று ஏறி சட்ட அமலாக்க நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
சட்ட அமலாக்க நடவடிக்கை நிறைவடைந்ததை அடுத்து, அக்கப்பல் அதன் பயணத்தையும் வழக்கமான நடவடிக்கைகளையும் தொடரலாம் என்று அதிகாரிகள் பச்சைக்கொடி காட்டியுள்ளனர்.
“மெர்ஸ்க் சன்டோரோ கப்பலிலிருந்து எஃப்பிஐ அதிகாரிகள் புறப்பட்டுச் சென்றுவிட்டனர். வழக்கம் போல இயங்க அந்தச் சரக்குக் கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது,” என்று அக்கப்பலை நிர்வகிக்கும் சிங்கப்பூரை மையமாகக் கொண்ட சினர்ஜி மரின் குழுமம் செப்டம்பர் 23ஆம் தேதியன்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தது.
இதுதொடர்பாக அது கூடுதல் தகவல்களை வெளியிடவில்லை.
அமெரிக்க கடலோரக் காவல் படையின் புலன்விசாரணைச் சேவை மற்றும் சுற்றுப்புறப் பாதுகாப்பு அமைப்பின் குற்றவியல் புலன்விசாரணைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளுடன் எஃப்பிஐ அதிகாரிகள் மெர்ஸ்க் சல்டோரோ கப்பலில் ஏறியதாக தி வாஷிங்டன் போஸ்ட் கூறியது.
மார்ச் 26ஆம் தேதியன்று மின்தடை ஏற்பட்டதை அடுத்து, பால்ட்டிமோர் துறைமுகத்துக்கு அருகில் உள்ள ஃபிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் மீது மோதி அது இடிந்து விழக் காரணமாக இருந்த சிங்கப்பூர் சரக்குக் கப்பலான ‘டாலி’யையும் இதே சினர்ஜி மரின் குழுமம் நிர்வகிக்கிறது.
பாலம் இடிந்து விழுந்ததில் ஆறு கட்டுமான ஊழியர்கள் மாண்டனர்.
கடலில் இடிபாடுகள் சிதறிக் கிடந்ததால் அந்தக் கப்பல் பாதை 11 வாரங்களுக்கு மூடப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
இதனால் பால்ட்டிமோர் துறைமுகத்துக்குப் பேரளவில் இழப்பீடு ஏற்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.
டாலி சரக்குக் கப்பலின் உரிமையாளருக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
டாலி கப்பலின் உரிமையாளரான கிரேஸ் ஓஷன் நிறுவனத்திடமிருந்து அமெரிக்க அரசாங்கம் 100 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் (S$129 மில்லியன்) அதிகமான இழப்பீட்டுத் தொகையைக் கோருகிறது.