உலக நிலவரம் நிச்சயமற்றதாக நீடிக்கும் வேளையில் நியூசிலாந்துடன் விரிவான உத்திபூர்வ பங்காளித்துவ (CSP) ஏற்பாட்டை சிங்கப்பூர் செய்துகொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவை மேலும் பலப்படுத்தும் வகையில் அத்தகைய ஏற்பாடு செய்துகொள்ளப்படுவதாக சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.
செப்டம்பர் 5ஆம் தேதி 15வது நாடாளுமன்றத்தில் தொடக்க உரையாற்றிய அதிபர் தர்மன் சண்முகரத்னத்தின் கருத்துக்கு ஏற்ப செய்துள்ள பிற்சேர்க்கையில் அமைச்சு இதனைத் தெரிவித்தது.
புவிசார் பதற்றங்கள் அதிகரிக்கும் நிலையில், உலகப் பொருளியலின் அடிப்படை மாற்றங்களை சிங்கப்பூர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அதிபர் தமது உரையில் குறிப்பிட்டு இருந்தார்.
தன்னைப் பேணித்தனமும் தொழில்நுட்ப இடையூறுகளும் சிங்கப்பூர் ஓர் உலக மையம் என்னும் நிலைக்கு அச்சுறுத்தலாகத் தோன்றும் வேளையில் அவ்வாறு செய்வது முக்கியம் என்றார் அவர்.
அதனையொட்டி, திங்கட்கிழமை வெளியறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தமது கருத்துகளை வெளிப்படுத்தினார்.
உலக மாற்றங்களை சிங்கப்பூரின் வெளியுறவுக் கொள்கை விரைவாகக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.
உலக வர்த்தகத்துக்கு இடையூறுகளை ஏற்படுத்தி வரும் ஒரு சகாப்தத்தை நோக்கி உலகம் உருமாறி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
“இத்தகைய மாற்றங்கள் சிங்கப்பூருக்குக் கடுமையான சவால்களாகத் தோன்றுகின்றன. ஒரு வர்த்தக மையம் மற்றும் தளவாட மையம் என்ற அடிப்படையில் சிங்கப்பூரின் செழிப்பு என்பது தடையற்ற வர்த்தகம், உலக விநியோகத் தொடரைப் பயன்படுத்துவது போன்றவற்றைச் சார்ந்தே உள்ளது.
“உலக நாடுகளின் வர்த்தகத்துக்குப் பொருத்தமான, நம்பிக்கையான நாடாக சிங்கப்பூர் நீடிக்க, வெளியுறவு அமைச்சு எல்லா நாடுகளுடனும் தொடர்ந்து ஈடுபாடு கொள்ளும். ஒரு நம்பிக்கையான பங்காளி என்னும் சிங்கப்பூரின் பங்கை நிலைநிறுத்தவும் வெளிநாடுகளில் உள்ள சிங்கப்பூரர்களைக் கவனித்துக்கொள்ளவும் நமது வெளியுறவுக் கொள்கைக்கு உள்ளூர் ஆதரவைத் திரட்டவும் அமைச்சு அதனைச் செய்யும்,” என்றார் அவர்.
சிங்கப்பூரும் நியூசிலாந்தும் இதற்கு முன்னர் 2019 மே மாதம் மேம்படுத்தப்பட்ட பங்காளித்துவ ஏற்பாட்டின் மூலம் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தின. நான்கு முக்கிய அம்சங்களுக்கான இருதரப்பு ஒத்துழைப்பையும் அவை ஏற்படுத்தின.
பாதுகாப்பு மற்றும் தற்காப்பு, அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கம், மக்களோடு மக்களுக்கான தொடர்புகள் ஆகியன அந்த நான்கு அம்சங்கள்.