உலகில் உள்ள கத்தோலிக்கர்களின் தலைவராகப் போற்றப்படும் போப் பிரான்சிஸின் மறைவுக்குச் சிங்கப்பூர்த் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
போப் பிரான்சிஸின் மறைவால் துக்கமடைந்திருப்பதாக அதிபர் தர்மன் சண்முகரத்னம் தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
“தம்முடைய அசைக்கமுடியாத கருணை, தாழ்மை, மனிதநேயத்துக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றால் சிங்கப்பூரில் உள்ளோர் உட்பட உலக நாடுகளில் உள்ள அனைவருக்கும் அவர் முன்மாதிரியாகத் திகழ்ந்தார்,” என்று அதிபர் தர்மன் கூறியுள்ளார்.
பல சமயத்தவர் வாழும் பன்முக சிங்கப்பூரில் போப் பிரான்சிஸ் முன்வைத்த அமைதி, புரிந்துணர்வுக்கான செய்தி பலதரப்பட்ட மக்களின் வாழ்க்கையைத் தொட்டது என்ற அவர், கடந்த ஆண்டு ஜூன் மாதம் ரோமுக்குச் சென்றிருந்தபோதும் செப்டம்பர் மாதம் போப் பிரான்சிஸ் சிங்கப்பூர் வந்திருந்தபோதும் அவரை நேரில் காண கிடைத்த வாய்ப்பை எண்ணி பெருமிதம்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மெச்சத்தக்க மேய்ப்பனை இழந்துள்ள கத்தோலிக்கச் சமூகத்துக்கு அதிபர் தர்மன் இரங்கல் தெரிவித்துக்கொண்டார்.
போப்பின் மரணத்தால் வருத்தம் அடைந்துள்ளதாகக் கூறிய பிரதமர் லாரன்ஸ் வோங், சிங்கப்பூரிலும் உலகத்திலும் உள்ள கத்தோலிக்கர்கள் உட்பட வத்திகனுக்கும் தமது இரங்கலைத் தெரிவித்தார்.
போப் பிரான்சிஸின் தலைமைத்துவமும் கருணையும் எண்ணிலடங்கா வாழ்க்கையைத் தொட்டு, நம்பிக்கை அளித்ததோடு பல்லின சமயங்களிடையே இணக்கத்தை வலுப்படுத்தவும் மக்களை ஒன்றிணைக்கவும் உதவியது என்று பிரதமர் வோங் கூறியுள்ளார்.
“கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சிங்கப்பூருக்குப் போப் பிரான்சிஸ் வந்திருந்தபோது அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளில் சிங்கப்பூருக்கு வருகையளித்த முதல் போப் அவர்தான்,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
மறைந்த போப் பிரான்சிஸ் நீண்டகாலத்துக்கு நினைவுகூரப்படும் மரபை விட்டுசென்றுள்ளதாகவும் பிரதமர் வோங் குறிப்பிட்டார்.
போப் பிரான்சிஸ் தமது சேவை காலம் முழுதும் பல்வேறு சமூக விவகாரங்களில் முற்போக்குடன் இருந்ததாக மூத்த அமைச்சர் லீ சியன் லூங் சொன்னார்.
பிற சமயத்தைச் சேர்ந்தோருடன் கலந்துரையாடி, சமயங்களுக்கு இடையிலான கலந்துரையாடல்களைப் போப் பிரான்சிஸ் அதிகம் முன்னிறுத்தியதாகவும் திரு லீ கூறினார்.
கடந்த ஆண்டு சிங்கப்பூருக்கு வந்த போப் பிரான்சிஸுடன் சிங்கப்பூர், நமது பல கலாசார, பல சமய சமூகங்கள் குறித்துக் கலந்துரையாடியதை அவர் நினைவுகூர்ந்தார்.
வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், “நம்பிக்கையின் நட்சத்திரம் மறைந்தாலும் தம்மைச் சந்தித்த அனைவரிடத்திலும் ஆழமான நினைவுகளை விதைத்துச் சென்றுள்ளார்,” எனப் பதிவிட்டுள்ளார்.

