ஜோகூர் பாரு: சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான ஆர்டிஎஸ் இணைப்புச் சேவை தொடர்பில் சிங்கப்பூர் அதிகாரிகளை மலேசியாவிலும் மலேசிய அதிகாரிகளைச் சிங்கப்பூரிலும் சோதனை நடவடிக்கைகளுக்காகப் பணியமர்த்துவது குறித்து இருநாடுகளும் கலந்துரையாடுகிறது.
அதுகுறித்த அடிப்படைச் செயல்பாட்டு நடைமுறைகளை இருநாடுகளும் ஆராய்வதாக மலேசிய உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுடியோன் இஸ்மாயில் கூறினார்.
மலேசியாவின் புக்கிட் சாகார் குடிநுழைவு, சோதனை, தனிமைப்படுத்துதல் வளாகத்தை மலேசியா மட்டுமின்றி சிங்கப்பூரும் பயன்படுத்திக்கொள்ளும் தனித்துவமான ஏற்பாட்டை இருநாடுகளும் அங்கீகரித்துள்ளதாகத் திரு சைஃபுடின் குறிப்பிட்டார்.
அந்த நடைமுறையின்கீழ் மலேசிய அதிகாரிகளும் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடிகளில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றார் அவர்.
“சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் பணியமர்த்தப்படும் அதிகாரிகள் குடிநுழைவுச் சோதனைகள், பாதுகாப்பு நடவடிக்கைகள், அவசரச் சேவைகள் ஆகிய பணிகளை மேற்கொள்வர். அவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்படவேண்டும்,” என்று திரு சைஃபுடின் சொன்னார்.
இரு நாட்டிலும் உள்ள குடிநுழைவுச் சோதனைச் சாவடிகளில் அனைத்துப் பணிகளும் சுமுகமாக இடம்பெறுவதற்கான நடைமுறைகளை உருவாக்குவதில் கூடுதல் கவனம் செலுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் நார்த் நிலையத்தையும் ஜோகூர் பாருவின் புக்கிட் சாகார் பகுதியையும் இணைக்கும் ஆர்டிஎஸ் இணைப்புச் சேவை முழுமையாகச் சேவை வழங்கத் தொடங்கும்போது கூட்ட நெரிசல் கணிசமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இருநாடுகளும் அவற்றின் அதிகாரிகளை ஒன்று மற்றதன் எல்லையில் பணியமர்த்தும்போது பயணிகளின் குடிநுழைவுச் சோதனைகளையும் இன்னும் துரிதமாகச் செய்ய முடியும் என்றார் திரு சைஃபுடின்.
தொடர்புடைய செய்திகள்
அத்துடன் ஒரு எல்லையில் மட்டும் பயணிகள் குடிநுழைவுச் சோதனையைக் கடந்தால் போதும்.
சிங்கப்பூர் அதிகாரிகள் மலேசியாவிலும் மலேசிய அதிகாரிகள் சிங்கப்பூரிலும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள முதலில் உள்நாட்டுச் சட்டங்கள் அமைக்கப்படவேண்டும் என்று திரு சைஃபுடின் வலியுறுத்தினார்.
ஜோகூர் பாரு- சிங்கப்பூர் ஆர்டிஎஸ் இணைப்பு மசோதா நிறைவேற்றப்பட்டுவிட்டது என்றும் அதை அரசிதழாக்குவதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அவர் சொன்னார்.

