கூலாய், ஜோகூர்: மலேசியர்களுக்கு மட்டும் சலுகை விலையில் விற்கப்படும் பெட்ரோலை தனது காரில் நிரப்பியதாகக் கூறப்படும் ஆடவர் ஒருவர்மீது வாகனப் பதிவெண்ணை வேண்டுமென்றே மாற்றியதற்காக அல்லது மறைத்ததற்காக புதன்கிழமை (ஜனவரி 14) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.
சிங்கப்பூர் நிரந்தரவாசியான அந்த 63 வயது ஆடவர்மீது ஜோகூரின் கூலாய் மாவட்ட நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும் என்று கூலாய் மாவட்டக் காவல்துறைத் தலைவர் டான் செங் லீ தெரிவித்தார்.
இந்தக் குற்றத்திற்காக 5,000 ரிங்கிட் (S$1,580) முதல் 20,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
“குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்த ஆடவர்க்கு ஓராண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்,” என்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் காவல்துறைத் தலைவர் குறிப்பிட்டார்.
ஜனவரி 4ஆம் தேதி ஜோகூரில் உள்ள பெட்ரோல் நிலையம் ஒன்றில், வெள்ளி நிற கார் ஒன்றுக்கு RON95 வகை பெட்ரோல் நிரப்பப்படுவதைக் காட்டும் காணொளி தொடர்பாகக் காவல்துறைக்குப் புகார் கிடைத்தது.
RON95 என்பது மலேசியாவில் பதிவுசெய்யப்பட்ட வாகனங்களைக் கொண்ட, அந்நாட்டு மக்களுக்காக மட்டும் சலுகை விலையில் விற்கப்படும் எரிபொருளாகும்.
குறிப்பிட்ட அந்த காரின் பதிவெண்ணின் முதல், கடைசி எழுத்துகள் கருநிற ஒட்டுவில்லையால் மறைக்கப்பட்டிருந்தன. மலேசியப் பதிவெண் கொண்ட காரைப்போல தோற்றமளிப்பதற்காக அவ்வாறு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அடையாளம் தெரியாத ஆடவர் ஒருவர் இது குறித்து கேள்வி எழுப்பியபோது, அந்த ஓட்டுநர் தாம் ஒரு மலேசியர் என்று கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
பின்னர் காவல்துறை அந்த ஓட்டுநரை அடையாளம் கண்டது. இதனைத் தொடர்ந்து, அந்த ஆடவர் விசாரணைக்கு உதவும் வகையில் தம் 67 வயது மனைவியுடன் கூலாய் மாவட்டக் காவல்துறைத் தலைமையகத்தில் முன்னிலையானார்.

