மலேசியாவில் விரைவுச் சேவை ஆற்ற சிங்கப்பூர் பேருந்துகளுக்கு அனுமதி இல்லை: போக்குவரத்து அமைச்சர்

2 mins read
cb0961fc-ba58-4247-8297-49ecaa1bcb98
மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக். - படம்: ஊடகம்

கோலாலம்பூர்: மலேசியாவுக்குள் அனுமதிக்கப்படும் சிங்கப்பூர் சுற்றுலாப் பேருந்துகள் விரைவுப் பயணச் சேவை வழங்க அனுமதி இல்லை என்றும் மீறிச் செயல்பட்டால் அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மலேசிய போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் எச்சரித்துள்ளார்.

மலேசிய நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 2) உரையாற்றிய அவர், சிங்கப்பூருக்குச் சுற்றுலா சேவையாற்றும் மலேசியப் பேருந்துகளுக்கும் இந்த நடைமுறை பொருந்தும் என்றார்.

“சுற்றுலாப் பேருந்துகள் நாட்டுக்குள் வருகையாளர்களைக் கொண்டு வருகின்றன. அது மலேசியாவுக்கு நன்மை அளிக்கிறது. அவற்றை நாங்கள் தடுக்கப்போவதில்லை.

“ஆயினும், அத்தகைய சுற்றுலாப் பேருந்துகள் விரைவுப் பேருந்துகள்போல செயல்படக்கூடாது. அவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட்ட வழிகளில் விரைவுப் பேருந்துக்கான பயணச்சீட்டை அவை விற்கக்கூடாது.

“அவ்வாறு விற்க அவற்றுக்கு அனுமதி இல்லை. மீறிச் செயல்படும் பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார் திரு லோக்.

மலேசியப் பேருந்துகள் சிங்கப்பூரில் இயங்குவதைப்போல தனது விரைவுப் பேருந்துகளுக்கு மலேசியா அனுமதி வழங்க வேண்டும் என சிங்கப்பூர் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டதாக அவர் தமது உரையில் குறிப்பிட்டார்.

“ஆயினும், விரைவுப் பேருந்துகளுக்கான சட்டபூர்வப் பிரிவை சிங்கப்பூர் பெற்றிருக்கவில்லை. வழக்கமான பயணத்துக்கும் சுற்றுலாப் பயணத்துக்கும் மட்டுமே அங்குள்ள போக்குவரத்து முறை அனுமதிக்கிறது.

“அதனால்தான், எங்கள் நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக உள்ளோம். சிங்கப்பூரில் இருந்து விரைவுப் பேருந்து சேவை எதனையும் அனுமதிக்க மாட்டோம்,” என்று திரு லோக் கூறினார்.

எதிர்த்தரப்புக் கூட்டணியான பெரிக்காத்தான் நேஷனலின் உறுப்பினர் அகமது மர்சுக் ஷாரி எழுப்பிய வினாவுக்குப் பதிலளிக்கையில் அவர் இவ்வாறு விவரித்தார்.

சுற்றுலாப் பேருந்துகள் தொடர்பான பாதுகாப்பு மற்றும் சோதனைகள் பற்றி அவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

‘புஸ்போகாம்’ (Puspakom) என்னும் தேசிய வாகனச் சோதனைகள் அல்லது மலேசியப் பாதுகாப்புத் தரநிலைகளுக்கு உட்படாத சிங்கப்பூர் பேருந்துகள் மலேசியாவில் நீண்டகாலமாக சேவையாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

அது பற்றிக் குறிப்பிட்ட திரு லோக், “உள்ளூர் பேருந்து நிறுவனங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் சிங்கப்பூர் விரைவுப் பேருந்துகளுக்கு அனுமதி வழங்கமாட்டோம்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்