ஆஸ்திரேலியாவில் வேண்டுமென்றே சைக்கிளோட்டியைக் காரைக் கொண்டு மோதியதாகச் சந்தேகிக்கப்படும் சிங்கப்பூரர் நோக்கமில்லா கொலைக் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
பெர்த் நகருக்குச் சுற்றுலா சென்ற அந்த ஆடவர், சம்பவம் தொடர்பில் 2024ஆம் ஆண்டிலிருந்து தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொலைக் குற்றத்தைத் தொடக்கத்தில் எதிர்கொண்ட 29 வயது இங் ஜிங் காய்க்கு நவம்பர் 3ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பார்வையிட்ட ஆவணங்களின்படி, மேற்கு ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றத்தில் ஆகஸ்ட் மாதம் நோக்கமில்லா கொலைக் குற்றச்சாட்டை இங் ஒப்புக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
நீதிமன்றத்தில் முதலில் குற்றஞ்சாட்டப்பட்ட இங், 2024ஆம் ஆண்டிலிருந்து தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.
அதையடுத்து மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள கெனிங் வேல் என்ற உச்சக்கட்ட பாதுகாப்பு வசதிகொண்ட ஹக்கே சிறைச்சாலையில் இங் கைதியாக இருந்ததை ஊடக அறிக்கைகள் காண்பித்தன.
முன்னாள் கணித ஆசிரியரான இங், பெர்த்தின் புறநகர்ப் பகுதியில் உள்ள கார்லிஸ்லி என்ற இடத்தில் 2024ஆம் ஆண்டு மே 24ஆம் தேதி பிற்பகல் 1.45 மணிவாக்கில் சாம்பல் நிற கியா கார்னிவல் காரை ஓட்டினார்.
குடும்பத்தினர், நண்பர்களுடன் இங் அங்குச் சுற்றுலாவிற்குச் சென்றிருந்தார்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு இதற்குமுன் அளித்த நேர்காணலில், சைக்கிளோட்டிமீது காரைக் கொண்டு மோதிய இங், சிறிது தூரம் வரை அவரை இழுத்துச்சென்றதாகவும் சைக்கிளோட்டிக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டதாகவும் மேற்கு ஆஸ்திரேலியக் காவல்துறை கூறியது.
அதையடுத்து ராயல் பெர்த் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட சைக்கிளோட்டி பின்னர் மாண்டார்.
சைக்கிளோட்டி காரிலிருந்த பொருள்களை எடுத்துக்கொண்டு திரும்பத் தர மறுத்ததாகக் கூறப்பட்டது.
பெர்த் நகரில் கொலைக் குற்றத்துக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படக்கூடும்.


