தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜோகூரில் $910,000 மதிப்புள்ள போதைப்பொருள்; சிங்கப்பூரர் உட்பட மூவர் கைது

2 mins read
8b7b02c9-7ad8-43f4-9a92-32d926de6350
போதைப்பொருள்களைப் பதுக்கி வைக்க கொண்டோமினிய வீடுகளைக் கும்பல் பயன்படுத்தியது தெரியவந்தது. - கோப்புப் படம்: ஊடகம்

ஜோகூர் பாரு: ஜோகூர் பாருவில் போதைப்பொருள் தொடர்பாக நடத்தப்பட்ட வேட்டையில் சிங்கப்பூரர் ஒருவர் உட்பட மூன்று ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து 3 மில்லியன் ரிங்கிட் (S$910,000) மதிப்புள்ள போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.

ஜோகூர் தலைநகரின் ஏழு வெவ்வேறு இடங்களில் பிப்ரவரி 6, 7 தேதிகளில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைளின்போது மூவரும் சிக்கியதாக ஜோகூர் மாநில காவல்துறைத் தலைமை அதிகாரி எம். குமார் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், “இம்மாதம் 6ஆம் தேதி நள்ளிரவுவாக்கில் ஜோகூர் பாரு தெற்கு வட்டாரத்தில் காவல்துறை அதிகாரிகள் சுற்றுக்காவலில் ஈடுபட்டு இருந்தபோது சந்தேகத்துக்கு இடமான முறையில் நடந்துகொண்ட ஆடவர் ஒருவரைத் தடுத்து நிறுத்தினர்.

“பின்னர் அந்த 41 வயது ஆடவரிடம் சோதனை நடத்தப்பட்டபோது 1.57 கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

“அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்த ஆறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது இருவர் பிடிபட்டனர். அவர்களில் ஒருவர் சிங்கப்பூரர்,” என்றார் ஆணையாளர் குமார்.

சந்தேகக் கும்பலுக்கு கோலாலம்பூரில் இருந்து போதைப்பொருள்கள் அனுப்பப்படுவதாகவும் அவற்றைப் பதுக்கி வைக்கவும் பொட்டலமிடவும் கொண்டோமினிய வீடுகளை அவர்கள் பயன்படுத்தியதாகவும் காவல்துறை நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

அதனால், நான்கு கொண்டோமினிய வீடுகளில் சோதனை நடத்தப்பட்டதாகவும் அவற்றில் இரண்டு ஒரே கட்டடத்தில் இருந்தவை என்றும் திரு குமார் கூறினார்.

சென்ற மாதம் முதல் போதைப்பொருள் கும்பலின் நடமாட்டம் இருந்ததாகவும் பல்வேறு போதைப்பொருள்களை கலப்பதில் கும்பல் ஈடுபட்டதாகவும் அவர் சொன்னார்.

அந்தக் கலப்பு போதைப்பொருள் சிறிய பொட்டலங்களில் அடைக்கப்பட்டு அவற்றின் மேல் உடனடி பானங்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டதை அதிகாரிகள் கண்டதாகவும் ஒவ்வொரு பொட்டலமும் 200 ரிங்கிட் முதல் 250 ரிங்கிட் வரை விற்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்