ஜோகூர் பாரு: மலேசிய மற்றும் சிங்கப்பூர் குடும்பங்கள், 2025ஆம் ஆண்டுக்கான சீனப் புத்தாண்டு ஒன்றுகூடல் உணவுக்காக இங்குள்ள கடலுணவு உணவகங்களில் அக்டோபர் மாதத்திலிருந்து முன்பதிவு செய்யத் தொடங்கின.
வரும் சீனப் புத்தாண்டு ஜனவரி மாதம் 29ஆம் தேதி கொண்டாடப்படும்.
2024ஆம் ஆண்டை விட, 2025ஆம் ஆண்டில் ஜோகூர் பாருவில் தங்கள் வருடாந்தர இரவு உணவை நடத்த சிங்கப்பூர் நிறுவனங்களின் முன்பதிவுகள் அதிகரித்துள்ளன என்று பிரபல சீன கடலுணவு உணவகத்தின் மூத்த மேலாளர் திரு ஜேக்கி கோ தெரிவித்தார்.
“நான் புரிந்து கொண்டதிலிருந்து, இந்த நிறுவனங்கள் வழக்கமாக தங்கள் ஊழியர்களுக்கு கடலுணவு உணவகங்களில் பெருநிறுவன விருந்தை வழங்குவதற்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாள் பயணத்தை நடத்துகின்றன,” என்று அவர் கூறினார்.
மதிய உணவுக்கும் இரவு உணவுக்கும் தலா இரண்டு அமர்வுகளுக்கு தனது உணவகம் திறந்திருக்கும் என்றும் அவர் கூறினார்.
“இரவு உணவு அமர்வுகளுக்கான அனைத்து 180 மேசைகளும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன.
“எங்கள் சீனப் புத்தாண்டு உணவுப் பட்டியலை நாங்கள் தொடங்குவதற்கு முன்பே, பலர் தங்கள் முன்பதிவுகளை அக்டோபர் மாதத்திலேயே செய்துவிட்டனர். பத்து பேர் அமர்ந்து உண்ணக்கூடிய உணவுத் தொகுப்பின் சராசரி விலை1,588 ரிங்கிட் (S$480) ஆகும்,” என்றும் திரு கோ விவரித்தார்.
அதிகமான வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, தனது உணவகம் அதன் நிகழ்ச்சி மண்டபத்தைத் திறக்கும் என்றும் அதில் கூடுதலாக 30 மேசைகள் போடுவதற்கு இடமிருக்கும் என்றும் திரு கோ சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
“எங்கள் வாடிக்கையாளர்கள் ஜோகூர் பாரு, கூலாய், பொந்தியான், சிங்கப்பூர் ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள். சீன வெளிநாட்டினரின் முன்பதிவுகளும் உள்ளன. அவர்கள் தங்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளை இங்கு நடத்த திட்டமிட்டுள்ளனர்,” என்றும் திரு கோ கூறினார்.
இதற்கிடையே, கடலுணவு உணவகச் சங்கிலியை வைத்திருக்கும் திரு புவா காய் ஹூ, இதற்கு நேர்மாறாக, உள்ளூர் நிறுவனங்களின் முன்பதிவுகள் கடந்த ஆண்டுகளை விட மெதுவாக வருகின்றன என்றார்.
முன்னதாக, பெருநிறுவன நிகழ்வுகளுக்கான முன்பதிவுகள் நவம்பரில் வந்ததாகவும் ஆனால் 2024ல் அது அதிகம் வரவில்லை என்றும் திரு புவா கூறினார்.
“நாங்கள் எங்கள் பெருநிறுவன வாடிக்கையாளர்களை அழைத்தோம். அவர்களின் முதலாளிகள் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று கூறிவிட்டனர்,” என்று அவர் கூறினார்.
தனது உணவகத்தின் வர்த்தகம் இன்னும் கொவிட்-19க்கு முந்தைய உச்சத்திற்குத் திரும்பவில்லை என்றும் திரு புவா வருத்தத்துடன் கூறினார்.
2023ஆம் ஆண்டிலிருந்து நிறுவனங்களிடமிருந்து தாமதமாகவே முன்பதிவு செய்யும் போக்கு இருப்பதாக ஜோகூர் சமையல் வல்லுநர் சங்கத்தின் தலைவர் ஜான் ஆங் கூறியதாக தி ஸ்டாரின் செய்தி தெரிவித்தது.