பாலித்தீவில் காதலியைத் கழுத்தை நெரித்துக் கொன்றதாக சிங்கப்பூரர் கைது

பாலித்தீவில் காதலியைத் கழுத்தை நெரித்துக் கொன்றதாக சிங்கப்பூரர் கைது

1 mins read
7add0d67-843a-4f6c-bff0-458dd897b603
கைது செய்யப்பட்ட ஆடவரை (வெள்ளை சட்டையில்) அழைத்துச் செல்லும் காவல்துறை அதிகாரிகள். - காணொளிப்படம்: இன்ஸ்டகிராம்

டென்பசார்: இந்தோனீசியாவின் பாலித்தீவில் உள்ள தங்குவிடுதி ஒன்றில் தம் காதலியைக் கொலை செய்ததாகக் கூறப்படும் சிங்கப்பூர் ஆடவர் ஒருவரை இந்தோனீசியக் காவல்துறை கைது செய்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

அந்த 26 வயது சிங்கப்பூரர், பாலித்தீவுத் தலைநகர் டென்பசாரில் உள்ள தங்குவிடுதி ஒன்றின் அறையில், தம் இந்தோனீசியக் காதலியைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

அந்த 26 வயதுப் பெண்ணின் உடலை அறையிலிருந்த பொம்மை ஒன்றுக்கு அடியில் மறைத்து வைத்திருந்ததாகவும் புதன்கிழமை (ஜூலை 15) அப்பெண்ணின் சகோதரர் உடலைக் கண்டுபிடித்ததாகவும் Detik.com செய்தித் தளம் தெரிவித்தது.

புதன்கிழமை மாலை காவல்துறைக்குப் புகார் கிடைத்ததை அடுத்து அந்த ஆடவர் கைது செய்யப்பட்டதாக டென்பசார் காவல்துறைத் தலைவர் லியோனார்டோ டி சிமத்துப்பாங் வியாழக்கிழமை தெரிவித்தார்.

2025ல் சுற்றுப்பயணியாக பாலித்தீவுக்குச் சென்ற அந்த ஆடவர், அங்கு தமது விசா காலத்தையும் தாண்டி சட்டவிரோதமாகத் தங்கியிருந்தார் என்றும் பிடிபடுவதற்கு முன்பு தீவின் தென்கிழக்குக் கடற்கரையில் உள்ள சனுர் என்ற கடலோர நகரை நோக்கித் தப்பியோட முயன்றார் என்றும் திரு லியோனார்டோ கூறினார்.

“அப்பெண்ணின் கழுத்தை அவர் 15 நிமிடங்களுக்கு நெரித்துக் கொன்றார்,” என்று திரு லியோனார்டோ கூறியதாக Kompas.com செய்தி வெளியிட்டது.

அப்பெண் மத்திய ஜாவாவில் உள்ள டெகால் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் அவர்கள் இருவரும் ஏறத்தாழ ஓராண்டாகக் காதலித்து வந்தனர் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்