திருவனந்தபுரம்: கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 20) காலை 9.25 மணியளவில் கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ பத்மநாபசுவாமி ஆலய சன்னிதானத்தில் புகைப்படமெடுத்த குற்றத்துக்கு சிங்கப்பூரில் வசிக்கும் ஆடவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகிறார்.
திருநீப்பனார் என்ற அந்த 49 வயது ஆடவர், முகத்தில் அணிந்திருந்த மூக்குக் கண்ணாடியில் புகைப்படக் கருவி பொருத்தப்பட்டிருந்தது. அதனைக் கொண்டு அவர் சன்னிதியில் படமெடுத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட அவர், சிங்கப்பூரின் பொங்கோல் நார்த்ஷோர் பகுதியில் வசிப்பவர் என்று இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது.
ஆலயத்தின் வடக்குப் பகுதியிலும் துலாபாரச் சேவை நடக்கும் வழிபாட்டு இடங்களையும் அவர் புகைப்படமெடுத்துள்ளார்.
அவரைக் கண்காணித்த ஆலயப் பாதுகாவலர்கள், உள்ளூர் காவல்துறையிடம் அவரை ஒப்படைத்தனர். சட்டத்தை மீறிய குற்றத்துக்கு அவர் விசாரிக்கப்படுகிறார். அதே ஆலயத்தில் கடந்த ஜூலை மாதம் 66 வயது உள்ளூர் ஆடவர் புகைப்படமெடுத்த குற்றத்துக்குக் கைதானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் முக்கிய ஆலயங்களில் குறிப்பிட்ட இடங்களில் புகைப்படங்கள் எடுக்க அனுமதியில்லை.

