ஈப்போ: மலேசியாவின் ஈப்போவிலுள்ள சுல்தான் அஸ்லான் ஷா விமான நிலையத்தில் கிட்டத்தட்ட 19 கிலோ கஞ்சா கடத்தியதாகச் சிங்கப்பூரர் ஒருவர்மீது அங்குள்ள நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (நவம்பர் 19) குற்றம் சுமத்தப்பட்டது.
சென் லாங், 26, என்ற அந்த ஆடவர், சீன மொழியில் தன்மீதான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது அதனைப் புரிந்துகொண்டதாகத் தலையசைத்தார். ஆயினும், இவ்வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதால், நீதிமன்றத்தில் அவரிடமிருந்து குற்ற ஒப்புதலோ மறுப்போ பதிவுசெய்யப்படவில்லை.
நவம்பர் 8ஆம் தேதி காலை 6.20 மணியளவில், விமான நிலையத்தின் பயணப்பதிவு முகப்பில் உள்ள பயணப்பொதிச் சோதனை இயந்திரம் ‘ஏ’யில் சென் 19.04 கிலோ கஞ்சாவைக் கடத்தியதாகக் குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.
அபாயகரமான போதைப்பொருள் சட்டத்தின்கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதால், குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால் சென்னுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம். மரண தண்டனை விதிக்கப்படாவிடில் குறைந்தது 12 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.
வழக்கின் அடுத்தகட்ட விசாரணை பிப்ரவரி 26ஆம் தேதி நடைபெறும் என அறிவித்த நீதிபதி, சென்னுக்குப் பிணை வழங்க மறுத்துவிட்டார்.
சென் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.சிவானந்தன் முன்னிலையாகி வாதாடினார்.
