ஜகார்த்தா: சிங்கப்பூரைச் சேர்ந்த ‘பிடிஎக்ஸ் டேட்டா சென்டர்ஸ்’ நிறுவனம், இந்தோனீசியாவில் உள்ள தனது மிகப்பெரிய தரவு மைய வளாகத்தின் முதற்கட்டப் பணிகளை 2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில் செயல்படுத்துவதற்கான திட்டத்தில் உறுதியாக உள்ளது.
சுற்றுச்சூழல், கட்டட அனுமதி தொடர்பான நிலுவையில் உள்ள விவகாரங்களால் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டிருந்த போதிலும் அந்நிறுவனம் தனது உறுதியைக் கைவிடவில்லை.
இந்தோனீசியாவில் ஏற்கெனவே மூன்று தரவு மைய தளங்களை இயக்கி வரும் அந்நிறுவனம், மேற்கு ஜாவாவின் ஜாத்திலுஹூரில் அமையவுள்ள 640 மெகாவாட் செயற்கை நுண்ணறிவு தரவு மைய வளாகத்தின் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதை சனிக்கிழமை (அக்டோபர் 3) உறுதிப்படுத்தியது.
மேற்கு ஜாவா ஆளுநர் டெடி முல்யாடியின் உத்தரவால் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
பிடிஎக்ஸ் நிறுவனம் செப்டம்பர் 22ஆம் தேதி 640 மெகாவாட் செயற்கை நுண்ணறிவு வளாகத்தின் கட்டுமானத்தைத் தொடங்கியதாக அறிவித்த இரண்டு வாரங்களுக்குள் பணிகளை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது
செப்டம்பர் 28ஆம் அந்த இடத்தை ஆய்வு செய்த ஆளுநர் டெடி, நிலுவையில் உள்ள இரண்டு ஒப்புதல்கள் குறித்து அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.
அதையடுத்து, அனைத்துத் தேவைகளும் பூர்த்தி செய்யப்படும் வரை கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைக்குமாறு அவர் செப்டம்பர் 30ஆம் தேதி உத்தரவிட்டதாக மேற்கு ஜாவா அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், “மீண்டும் அனுமதி கிடைப்பதைப் பொறுத்து, முதற்கட்டப் பணிகள் 2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பணிகளைத் தொடங்க இலக்கு கொண்டுள்ளோம்,” என்று அந்நிறுவனம் ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ செய்தித்தாளிடம் தெரிவித்தது.
எஞ்சியுள்ள ஒழுங்குமுறை, பிற அனுமதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய அதிகாரிகளுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாகவும் அதில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும் அது மேலும் கூறியது.
