ஜோகூர் பாரு: காவல்துறையில் பொய்ப் புகார் கொடுத்த குற்றத்துக்காக சிங்கப்பூர் பெண் ஒருவருக்கு ஜோகூர் நீதிமன்றம் 1,000 ரிங்கிட் அபராதம் விதித்துள்ளது.
அமைரா லைலா ஹோ, 45, என்னும் அந்தப் பெண் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு செவ்வாய்க்கிழமை (ஜனவரி 28) நீதிமன்றத்தில் ஆங்கிலத்தில் வாசிக்கப்பட்டது. அதனை அவர் ஒப்புக்கொண்டார்.
அவர் சார்பாக யாரும் வாதாடவில்லை. மேலும், மூன்று வார சிறைத் தண்டனைக்குப் பதிலாக விதிக்கப்பட்ட 1,000 ரிங்கிட் அபராதத்தை நீதிமன்றத்தில் அமைரா செலுத்திவிட்டார்.
ஜோகூர் பாருவில் உள்ள லார்கின் காவல் நிலையத்தில் கடந்த புதன்கிழமை (ஜனவரி 22) அதிகாலை 1.02 மணிக்கு புகார் ஒன்றை அளித்தார்.
தாமான் அபாட்டின் ஜாலான் சிலாடாங்கில் உள்ள கடைத்தொகுதி ஒன்றில் ஜனவரி 10ஆம் தேதி தம்மை அணுகிய ஒரு தம்பதி தேநீர் மாதிரியை அருந்தச் சொன்னதாகவும் அதற்கு மறுத்ததால் தேயிலையை நுகரச் சொன்னதாகவும் அந்தப் புகாரில் அமைரா கூறியிருந்தார்.
தேயிலையை நுகர்ந்த பின்னர் தமக்கு தலைசுற்றல் ஏற்பட்டதாகவும் அந்தத் தம்பதியால் தாம் கிட்டத்தட்ட கடத்தப்பட்டதாகவும் அதில் அவர் தெரிவித்து இருந்தார்.
அந்தப் புகாரைத் தொடர்ந்து விசாரணையில் இறங்கிய காவல்துறையினர், அவர் சொன்ன இடத்தில் கடத்தல் சம்பவம் எதுவும் நிகழவில்லை என்பதை கண்காணிப்புப் படக் கருவி (சிசிடிவி) மூலம் உறுதிசெய்ததாக ஜோகூர் தலைமைக் காவல்துறை அதிகாரி எம். குமார் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, பொய்ப் புகார் அளித்ததாக அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
அந்தப் பெண் அளித்த புகார் உண்மை என்று நம்பிய சமூக ஊடகப் பயனாளர்கள் ஜோகூர் பாதுகாப்புநிலை குறித்து கேள்வி எழுப்பியதாக திரு குமார் கூறினார்.
மாநில பொது ஒழுங்கு சம்பந்தப்பட்ட பாதுகாப்பு நிலவரம் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை ஜோகூர் காவல்துறை உறுதி செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

