மலேசியாவில் மலையேறிவிட்டுத் திரும்பக் கீழே இறங்கி வரும்போது தவறி விழுந்ததில் சிங்கப்பூரர் ஒருவரின் வலது கை முறிந்தது.
நெகிரி செம்பிலான் மாநிலத்திலுள்ள குனோங் டத்தோ மலையில் ஏறிய 11 மலையேறிகளும் இரு வழிகாட்டிகளும் அடங்கிய குழுவில் பாதிக்கப்பட்ட அந்த 52 வயது ஆடவரும் இடம்பெற்றிருந்ததாகப் பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த ஆடவரின் பெயர் வெளியிடப்படவில்லை.
மலையிலிருந்து கீழே இறங்கும்போது, உச்சியிலுள்ள படிக்கட்டுகளுக்கு அருகே பாறைப் பகுதி ஒன்றில் அவர் தவறி விழுந்து வலது கையில் முறிவு ஏற்பட்டதாக நம்பப்படுவதாக மீட்புப் பணியாளர்கள் கூறினர்.
உதவிக்கான அழைப்பு காலை 10.29 மணியளவில் கிடைத்ததாக அதிகாரிகள் கூறினர்.
மலையடிவாரத்திலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் பாதிக்கப்பட்டவர் இருந்த இடத்திற்கு, ஐந்து பேர் கொண்ட மீட்புக் குழு உடனடியாக அனுப்பிவைக்கப்பட்டது.
தூக்குப் படுக்கையில் அந்தச் சிங்கப்பூரரை மீட்புப் படையினர் கீழே கொண்டு வந்த பின்னர், அவர் மருத்துவப் பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
‘ஃப்ரீ மலேசியா டுடே’ (Free Malaysia Today) செய்தி இணையத்தளத்தின் தகவல்படி, ஏறத்தாழ 885 மீட்டர் (2,900 அடி) உயரம் கொண்ட குனோங் டத்தோ மலையின் உச்சிப்பகுதி மாபெரும் கிரானைட் பாறைகளைக் கொண்டதாகும்.
தொடர்புடைய செய்திகள்
நேரடியாகப் பாறையில் பொருத்தப்பட்டுள்ள ஏறக்குறையச் செங்குத்தான இரும்பு ஏணிகள் வழியாகத்தான் மலையேறுபவர்கள் இதன் உச்சியை அடைய முடியும்.
இந்த மலையின் மிக உயரமான பாறைகளில் ஒன்றில் உள்ள பெரிய பள்ளம், மலையிலிருந்து மலைக்குத் தாவக்கூடிய ஆற்றல் பெற்றவராகக் கருதப்படும் புகழ்பெற்ற மலாய்ப் போர்வீரர் ஹாங் துவா என்பவரின் பாதச் சுவடு என்று உள்ளூர் நாட்டுப்புறக் கதைகள் கூறுகின்றன.

