மனைவி, வளர்ப்பு மகனைக் கொலை செய்த சிங்கப்பூரருக்குச் சிறை, பிரம்படி

1 mins read
854c5660-2d8e-40d2-9367-a0b33c888aeb
சிங்கப்பூரைச் சேர்ந்த 36 வயது ‌‌‌ஷாருல் நிசாம் சுராய்மி. - படம்: த ஸ்டார்

மலாக்கா உயர் நீதிமன்றம், மனைவியையும் வளர்ப்பு மகனையும் கொலை செய்த குற்றத்துக்காக சிங்கப்பூர் ஆடவருக்கு 72 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 24 பிரம்படிகளும் விதித்துள்ளது.

ஆடவரால் கொலை செய்யப்பட்டோரின் சடலங்களின் வெவ்வேறு பகுதிகள் ஆறாண்டுக்கு முன் புதர் நிறைந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்டன.

ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 36 வயது ‌‌‌ஷாருல் நிசாம் சுராய்மிக்கு 36 ஆண்டு சிறைத் தண்டனையும் 12 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன. 2019ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதியிலிருந்து இரண்டு தண்டனைகளும் ஒரே நேரத்தில் நிறைவேற்றப்படும்படி உத்தரவிடப்பட்டது.

2019ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி மாலை 6 மணிக்கும் அக்டோபர் 7ஆம் தேதி காலை 7.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் மலாக்கா தெங்காவின் பாத்து பெரென்டாமில் உள்ள தாமான் மெர்டேக்கா ஜெயா என்ற பகுதியில் உள்ள வீட்டில் 27 வயது மனைவி நுர்ஃபசிரா பிடினையும் அவரது 11 வயது மகன் முகமது இமான் அ‌ஷ்ராஃப் அப்துல்லாவையும் ‌‌‌ஷாருல் நிசாம் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

மனைவியையும் வளர்ப்பு மகனையும் பாதுகாக்கவேண்டிய ஆடவர் அவர்களைக் கொலை செய்ததைக் கருத்தில்கொண்டு தீர்ப்பளிக்கும்படி அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் இதற்குமுன் வாதிட்டனர்.

சட்டப்பிரிவு 302ன் கீழ் குற்றஞ்சாட்டப்படுவோருக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படலாம் அல்லது 40 ஆண்டு வரையிலான சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். மரண தண்டனை விதிக்கப்படாவிட்டால் குறைந்தது 12 பிரம்படிகள் விதிக்கப்படுவது கட்டாயம்.

குறிப்புச் சொற்கள்