பேங்காக்: தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் எட்டோமிடேட் கலந்த ‘கேபோட்’ மின்சிகரெட்டுகளை விற்றதற்காகக் கைதான நால்வரில் சிங்கப்பூர் ஆடவரும் ஒருவர் என்று தாய்லாந்தின் கௌசோட் நாளேடு சொன்னது.
கைதான 33 வயது ஆடவரிடமிருந்தும் தாய்லாந்துப் பெண்ணிடமிருந்தும் 130 கேபோட் மின்சிகரெட்டுகளும் ஒரு மில்லியன் பாட் ரொக்கமும் கைப்பற்றப்பட்டன.
பேங்காக்கில் உள்ள மற்றொரு கூட்டுரிமை வீட்டில் தாய்லாந்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் பிடிபட்டதைத் தொடர்ந்து சிங்கப்பூர் ஆடவர் கைதானார்.
கைதான பெண்கள் சமூக ஊடகப் பிரபலங்கள் உள்ளிட்டோருக்கு கேபோட் கருவிகளை 1,800லிருந்து 2,000 பாட் வரை விற்றதாக வாக்குமூலம் கொடுத்தனர். நாள் ஒன்றுக்கு அவர்கள் 50லிருந்து 100 கேபோட் விற்றதாகக் கூறப்படுகிறது.
மயக்க மருந்தில் பயன்படுத்தப்படும் எட்டோமிடேட்டின் பயன்பாடு கட்டுக்கடங்காமல் போனதை அடுத்து தாய்லாந்து அதை இரண்டாம் வகை போதைப் பொருளாக இவ்வாண்டு ஜூலை மாதம் வகைப்படுத்தியது.
இரண்டாம் வகை போதைப் பொருளைத் தாய்லாந்துக்குள் கடத்தியதாக நால்வர்மீதும் குற்றஞ்சாட்டப்பட்டது.
கைது செய்யப்பட்ட சிங்கப்பூர் ஆடவர் தாய்லாந்தில் அனுமதிக்கப்பட்டதைவிட அதிக நாள்கள் தங்கியிருந்த குற்றச்சாட்டையும் எதிர்நோக்குகிறார்.