ஜேஜூ/தென் கொரியா: தென்கொரியாவின் ஜேஜூ தீவில் உள்ள ‘சன்பங்சன்’ மலையின் தடை செய்யப்பட்டப் பகுதியில் காணாமற்போன 60 வயது சிங்கப்பூர் ஆடவர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டார்.
அந்தச் சம்பவம் திங்கட்கிழமை (மே 18) இரவு 7.48 மணிக்கு நடந்தது. பல சுற்றுலாப் பயணிகள் அந்த மலைக்கு வந்து செல்வது வழக்கம்.
மக்கள் நடமாட்டத்தால் ஏற்படக்கூடிய மலைச் சரிவைத் தடுக்கவும் அங்குள்ள தாவர வகைகளையும் மலர்வனங்களையும் பாதுகாக்கவும் மலையின் உச்சியை அடையும் பகுதி யாரும் செல்லாத வகையில் தடை செய்யப்பட்டுள்ளது.
குகைக் கோயில் எல்லை
மலை உயரத்தின் பாதி அளவை அடைந்ததும் அங்குள்ள ‘சன்பங்குல்சா’ குகைக் கோயில் எல்லை வரை மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
இந்நிலையில், அன்றைய நாளன்று இரவு அந்தப் பயணி தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் வழிதவறிச் சென்றுவிட்டார். அங்கிருந்து வெளிவரும் பாதை அறியாது அவர் தொலைபேசியில் அவசர உதவி கோரினார்.
ஏறத்தாழ இரண்டு மணி நேரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு, இரவு 10 மணியளவில் தென் கொரியத் தீயணைப்புத் துறையினர் அவரை வனப்பகுதியில் அடையாளம் கண்டு, ஹெலிகாப்டர் மூலம் மீட்டனர்.
சட்ட நடவடிக்கை
மீட்கப்பட்ட ஆடவர் நலமுடன் இருப்பதாகத் தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்தனர். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அனுமதியின்றி நுழைந்ததற்காக, கலாசாரப் பாரம்பரியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவர்மீது காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
அச்சட்டப்படி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் $17,000 வரை அபராதம் அல்லது இரண்டு ஆண்டுவரை சிறைத்தண்டனை ஆடவருக்கு விதிக்கப்படலாம்.

