கோலா பெராங்: இரண்டாம் கட்ட கிழக்கு கடற்கரை விரைவுச்சாலையின் 403வது கிலோமீட்டரில் ஆபத்தான முறையில் மோட்டார்சைக்கிள் சாகசங்களைச் செய்ததாகக் கூறப்படும் சிங்கப்பூரைச் சேர்ந்த மோட்டார்சைக்கிளோட்டி ஒருவரை, வியாழக்கிழமையன்று (ஜூலை 30) மலேசியக் காவல்துறை கைதுசெய்தது.
20 வயதுகளில் உள்ள அந்த நபர், நெடுஞ்சாலையில் ‘யமஹா ஆர்எக்ஸ்இசட்’ மோட்டார்சைக்கிளை ஓட்டிச் சென்றபோது ‘சூப்பர்மேன்’ சாகசம் செய்வதைக் கண்ட போக்குவரத்து விசாரணை, அமலாக்கத் துறையினரால் மாலை 6 மணிக்கு தடுத்து வைக்கப்பட்டார் என்று உலு திரெங்கானு மாவட்டக் காவல்துறைத் தலைவர் கண்காணிப்பாளர் ஷஹருதின் அப்துல் வஹாப் கூறினார்.
கோலா நெரசில் உள்ள கோங் படாக் மோட்டார் பந்தயத் தடத்துக்கு வெள்ளிக்கிழமை (ஜூலை 31) தொடங்கிய இரண்டு நாள் ஆர்எக்ஸ்இசட் உறுப்பினர்கள் 8.0 கூட்டத்திற்கு சந்தேக நபர் சென்றுகொண்டிருந்ததாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
ஆர்எக்ஸ்இசட் உறுப்பினர் 8.0 திட்டத்தில் பங்கேற்பவர்கள் உட்பட அனைத்து சாலைப் பயனாளர்களும், போக்குவரத்து விதிமுறைகளை எப்போதும் கடைப்பிடித்து, பாதுகாப்பான, பொறுப்பான முறையில் வாகனம் ஓட்ட வேண்டும் என திரு ஷஹருதீன் வலியுறுத்தினார்.
மற்றச் சாலைப் பயனர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிப்போருக்கு எதிராகக் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் கூறியதாக பெர்னாமா செய்தி வெளியிட்டது.

