தாய்லாந்து தலைநகர் பேங்காக்குக்குச் சென்ற சிங்கப்பூர் சுற்றுப்பயணி ஆண்டி கோ குவான் யோங், 52, தமது நண்பருடன் அதிகாலையில் வீதியில் நடந்துகொண்டிருந்தார்.
அப்போது திருநங்கை ஒருவர் அவர்களை அணுகி திரு கோவை திடீரென கட்டியணைத்தார்.
தம்மை நட்புடன் அணைத்ததாக திரு கோ நினைக்க, சில வினாடிகளில் திரு கோ கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியின் கொக்கியைக் கழற்றி, சங்கிலியைப் பறித்துக்கொண்டு அந்த திருநங்கை ஓடினார்.
திரு கோவும் அவருடைய நண்பரும் திருநங்கையைத் துரத்திப் பிடித்து தங்கச் சங்கிலியை மீட்டனர். பின்னர் அவர்கள் காவல்துறையை அழைத்தனர்.
காவல்துறையினர் அங்கு சென்றபோது, பிடிபட்ட திருநங்கையிடம் தனிநபர் ஆவணங்கள் ஏதும் இல்லை.
ஃபேஸ்புக்கில் இச்சம்பவம் பற்றி பதிவிட்ட பேங்காக்கின் லிம்பினி வட்டாரக் காவல்துறை, அச்சம்பவம் அசோக் ரயில் நிலையத்தின் அருகே செவ்வாய்க்கிழமை (மார்ச் 7) பின்னிரவு 12.30 மணி அளவில் நடந்ததாகக் கூறியது.
சங்கிலியின் மதிப்பு சுமார் $1,100 இருக்கும் என்று கூறப்பட்டது.
சங்கிலியைப் பறித்தவர், கம்போடியாவிலிருந்து சட்டவிராதமாக தாய்லாந்தில் நுழைந்தவர் என்றும் அவர் கிங்கொன் எனும் பெயரை வைத்துக்கொண்டதாகவும் காவல்துறை கூறியது.