விபத்தில் மோசமாக காயமுற்ற சிங்கப்பூரர்; தகவல் நாடும் ஜோகூர் காவல்துறை

விபத்தில் மோசமாக காயமுற்ற சிங்கப்பூரர்; தகவல் நாடும் ஜோகூர் காவல்துறை

2 mins read
மலேசியக் காவல்துறை அதிகாரி, ஓட்டுநர் ஆகியோர் விபத்தில் சிக்கினர்
dcb1e5fe-b322-40b5-920a-9e990a22fd1d
சம்பந்தப்பட்ட சிங்கப்பூரரின் கார் சேதமடைந்தது. - படம்: தெற்கு மாவட்டக் காவல்துறை

ஒரு விபத்து குறித்துக் கூடுதல் தகவல் பெற ஜோகூர் பாரு காவல்துறையினர், சிங்கப்பூர் ஓட்டுநர் ஒருவரின் உதவியை நாடுகின்றனர்.

அந்த ஆடவரும் மலேசியக் காவல்துறை அதிகாரி ஒருவரும் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 27) நிகழ்ந்த விபத்தில் மோசமான காயங்களுக்கு ஆளாயினர்.

சம்பந்தப்பட்ட 53 வயது சிங்கப்பூர் ஓட்டுநருக்குப் போக்குவரத்துக் குற்ற அழைப்பாணை வழங்க செவ்வாய்க்கிழமை இரவு 10 மணியளவில் லார்க்கின்னுக்கு அருகே ஜாலான் ஜோகூர் பாரு-அயர் ஹித்தாம் பகுதியில் சாலையோரம் நிறுத்துமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டது. ஜோகூர் பாரு தெற்கு மாவட்டக் காவல்துறை அறிக்கையில் இதனைத் தெரிவித்தது.

அந்த ஆடவரின் டொயோட்டா எஸ்டிமா காரும் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரியின் மோட்டார் சைக்கிளும் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்தன. வாகனம் ஓட்டும்போது தொலைத்தொடர்புக் கருவியைப் பயன்படுத்தியதாக சிங்கப்பூரைச் சேர்ந்த ஆடவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டது என்று விசாரணை மேற்கொள்ளும் அதிகாரியான டாயாங் அஸீமா வியாழக்கிழமை (ஜனவரி 29) ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.

சிங்கப்பூர் ஓட்டுநரின் காருக்குப் பின்னால் அவரும் காவல்துறை அதிகாரியும் நின்றுகொண்டிருந்தபோது மலேசிய ஆடவர் ஒருவர் ஓட்டிச் சென்ற ஹோண்டா சிவிக் கார் அவர்கள் மீது மோதியது. அந்த ஆடவரின் உடலில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக மதுபானம் கலந்திருந்தது சுவாசப் பரிசோதனையின்போது தெரிய வந்தது.

மோசமாகக் காயமடைந்த இருவரும் ஜோகூர் பாருவில் உள்ள ஒரு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். ஆனால், சிங்கப்பூரர் மறுநாள் தனது உறவினருடன் மருத்துவமனையிலிருந்து புறப்பட்டதாக திரு டாயாங் கூறினார்.

மதுபானம் அல்லது போதைப்பொருள் உட்கொண்டு வாகனம் ஓட்டியதாக சம்பந்தப்பட்ட உள்ளூர் ஓட்டுநர் மீது குறற்ச்சாட்டு சுமத்தப்பட்டதாக திரு டாயாங் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்