குற்றச்செயல்கள் இருந்தாலும் ஜகார்த்தாவுக்குத் தயங்காமல் செல்லும் சிங்கப்பூர் பயணிகள்

குற்றச்செயல்கள் இருந்தாலும் ஜகார்த்தாவுக்குத் தயங்காமல் செல்லும் சிங்கப்பூர் பயணிகள்

2 mins read
4bcfdeab-463b-4e56-8083-7d02a4c4daa3
ஜகார்த்தா ஆளுநர், கண்காணிப்புக் கேமராக்களை தலைநகர் முழுவதும் நிறுவும் திட்டத்தை ஆராய்ந்து வருகிறது. - படம்: சாவ்பாவ்
Google News Preferred Icon

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் தலைநகரான ஜகார்த்தாவில் நடக்கும் குற்றச்செயல்கள் அச்சத்தை ஏற்படுத்தினாலும் சிங்கப்பூர் சுற்றுப்பயணிகள் தயங்காமல் அங்குச் சென்று வருகின்றனர். அந்நாட்டின் ரூப்பியாவின் மதிப்பு சரிந்துள்ளதே அதற்குக் காரணம்.

ஜகார்த்தாவின் சாலைக் குற்றச்செயல்கள், சுற்றுப்பயணிகளைக் குறிவைத்து நடத்தப்படும் கொள்ளைச் சம்பவங்கள் பற்றிய காணொளிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

அண்மைய மாதங்களாக இணையத்தளங்களில் பரவிவரும் பல காணொளிகளில் ஜகார்த்தாவின் பல்வேறு பகுதிகளில் பட்டப்பகலில் மோட்டார்சைக்கிள் கொள்ளையர்கள் துப்பாக்கிகள்போல தோற்றமளிக்கும் ஆயுதங்களைக் காட்டி மிரட்டுவது தெரிகிறது.

ஆனால், ஜகார்த்தா நகர ஆளுநர், அவை தனிப்பட்ட சம்பவங்கள் என்கிறார்.

சிங்கப்பூருக்கு அடுத்ததாக ஆசியானின் இரண்டாவது பாதுகாப்பான நகரம் ஜகார்த்தா என்பதற்கான சில ஆய்வுகளையும் அவர் மேற்கோள்காட்டுகிறார்.

இந்நிலையில், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நேர்காணல் கண்டதில் குற்றச்செயல்கள் பற்றி அதிகம் கவலைப்படாமல் சிங்கப்பூரர்கள் பலர் ஜகார்த்தாவுக்குச் செல்வது தெரிகிறது. பொருள்களை வாங்கவும் சாப்பிடவும் அவர்கள் அங்குச் சென்று வருகின்றனர்.

“பயப்படுவதற்கெல்லாம் நேரமில்லை, நிறைய கடைகளில் பொருள்களை வாங்கலாம்,” என்று சிரித்துக்கொண்டே கூறினார் நோராய்னி ரஹமத், 52.

அவர், தனது இரண்டு சகோதரிகளுடன் ஜகார்த்தா சென்றிருந்தார்.

மே 22 முதல் 25 வரையிலான அந்தப் பயணத்தை ‘முழு அளவிலான ஷாப்பிங் மராத்தான்’ என்று அவர் வருணித்தார்.

மூன்று சிங்கப்பூரர்களும் மென்டெங்கில் தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து மத்திய ஜகார்த்தாவில் உள்ள பல பெரிய கடைத்தொகுதிகளுக்கு நடந்தே சென்றுவிடலாம்.

“குற்றச்செயல்கள் பற்றிய காணொளிகள் பரவும்போது மக்கள் அதைப் பற்றியே பேசுவார்கள். உண்மையைச் சொல்லப்போனால் சிங்கப்பூர் அல்லது இதர பெரிய நகரங்களில் கவனமாக இருப்பதுபோல இங்கும் நாங்கள் கவனமாக இருக்கிறோம்,” என்று நோராய்னி தெரிவித்தார்.

இவரது கருத்தையே பிரதிபலித்த மார்க்கஸ் டான், 38, நண்பர்களுடன் ஈஸ்ட் நுசா தெங்காராவில் விடுமுறையைக் கழித்த பிறகு சிங்கப்பூர் திரும்புவதற்கு முன்பு பொருள்களை வாங்குவதற்காக மூன்று நாள்கள் ஜகார்த்தாவில் தங்கினார்.

“நூறு சிங்கப்பூர் வெள்ளிக்கு எவ்வளவோ செய்யலாம்; அதிகமாகப் பொருள்களை வாங்கலாம், அதிகமாகச் சாப்பிடலாம், சிங்கப்பூர் திரும்பினாலும் குறைவாகச் செலவழித்த உணர்வே ஏற்படுகிறது,” என்றார் அவர்.

அண்மையில் ஒரு சிங்கப்பூர் வெள்ளி, ஏறக்குறைய 13,800 ரூப்பியாவுக்குப் பரிவர்த்தனை செய்யப்பட்டது.

இதற்கிடையே, தெருக்களில் நடக்கும் குற்றச்செயல்களைத் தடுக்கும் கடுமையான நடவடிக்கைகளுக்கு ஆளுநர் பிராமோனோ அனுங் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இனிமேலும் குற்றச்செயல்களைச் சகித்துக்கொள்ள முடியாது. பொதுமக்களின் பாதுகாப்பையும் உலகளாவிய நகரம் என்ற பெருமையையும் அவை சீர்குலைக்கின்றன என்று அவர் கூறினார்.

தலைநகர் முழுவதும் காவல்துறைக் கண்காணிப்புக் கட்டமைப்புடன் ஒருங்கிணைக்கப்பட்ட கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

“இதைச் செயல்படுத்த முடிந்தால், ஜகார்த்தாவில் குற்றச்செயல்களைத் தடுப்பதற்கான கண்காணிப்பு அமைப்பாக இது மாறும்,” என்று பிரமோனோ கூறினார்.

குறிப்புச் சொற்கள்