ஜோகூர் பாரு: ஜோகூர் பாருவில் இரவு உணவு உண்ட பிறகு காருக்குத் திரும்பிய சிங்கப்பூர்ப் பெண்ணுக்குக் காத்திருந்தது அதிர்ச்சி.
அவரின் கார் சன்னல்களில் ஒன்று உடைக்கப்பட்டிருந்தது. காருக்குள் இருந்த அவரின் மடிக்கணினியையும் பிராடா கைப்பையையும் காணவில்லை. கைப்பைக்குள் வேலை தொடர்பான ஆவணங்களை அவர் வைத்திருந்தார்.
ஹார்ட்வேர் ஸோன் தொழில்நுட்ப இணையத்தளத்தில் தனக்கு நடந்தவற்றை விவரித்து அந்தப் பெண் புதன்கிழமை (டிசம்பர் 17) பதிவிட்டிருந்தார். ஆனால் அந்தப் பதிவு தற்போது அகற்றப்பட்டுவிட்டதாக ஷின் மின் ஊடகம் தெரிவித்தது.
தாமான் பெலாங்கியில் உள்ள ஜாலான் தாமான் ஸ்ரீ பெலாங்கியில் உள்ள ‘த டோஸ்ட்’ கடைக்கு அருகே சம்பவம் நடந்ததாகப் பெண் தெரிவித்தார்.
டொயோட்டா வெல்ஃபைர் காரின் முன்பக்கப் பயணி இருக்கையின் அருகே உள்ள சன்னல் முழுமையாக நொறுக்கப்பட்டிருந்தது.
கண்ணாடிச் சில்லுகள் தரையில் காணப்பட்டன.
உள்ளூர்க் காவல் நிலையத்தில் புகாரளித்திருப்பதாகப் பெண் சொன்னார்.
காரில் எந்தப் பொருளையும் விட்டுச்சென்றிருக்கக்கூடாது என்று காவல்துறையினர் கூறியதாகத் தெரிகிறது.
தொடர்புடைய செய்திகள்
பக்கத்திலிருந்த கடைகளின் கண்காணிப்புப் படக்கருவிகளில் சம்பவம் பதிவாகியிருந்தது. அந்தப் பதிவுகளைப் பெற்றிருப்பதாகவும் சிங்கப்பூர்ப் பெண் சொன்னார்.
அண்மை ஆண்டுகளில் ஜோகூர் பாருவில் வாகனங்கள் உடைக்கப்பட்டு உடைமைகள் களவாடப்படும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்துள்ளன.

