ஜோகூர் பாரு: ஜோகூர் பாருவில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் நடந்த சண்டை உட்பட இரண்டு தனித்தனி சண்டைகளில் ஈடுபட்ட சிங்கப்பூர் ஆடவர்கள் இருவரை மலேசியக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 21) அன்று மாலை 5.20 மணியளவில் ஒரு வணிக வளாகத்தில் 46 மற்றும் 56 வயதுடைய இரண்டு ஆடவர்கள் சண்டையில் ஈடுபட்டதாக ஜோகூர் பாரு தெற்கு காவல்துறைத் தலைவர் ரவூப் செலாமாட் தெரிவித்தார்.
“சந்தேக நபர்களில் ஒருவரின் மனைவி, மற்ற சந்தேக நபர் தன் மீது (பீர்) மதுபானத்தை ஊற்றியதற்காக அழைத்ததை அடுத்து சண்டை வெடித்தது. சண்டையைக் கட்டுப்படுத்த காவல்துறை அதிகாரிகள் தலையிட வேண்டியிருந்தது.
“அதே நாள் மாலை 6.15 மணியளவில், சந்தேக நபர்களில் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துக் கொண்டிருந்தபோது, மற்றொரு சந்தேக நபர் அவரைத் தாக்கினார். இது மற்றொரு சண்டைக்கு வழிவகுத்தது,” என்று திரு ரவூப் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
இந்தச் சண்டையில் சந்தேக நபர்கள் இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக சுல்தானா அமினா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
சந்தேக நபர்கள் இருவர் மீது நடத்தப்பட்ட போதைப்பொருள் பரிசோதனையில் அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியதற்கான அறிகுறி இல்லை என்று தெரிய வந்தது. அவர்கள் இருவரும் டிசம்பர் 22 முதல் இரண்டு நாள்களுக்கு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை உதவி கண்காணிப்பாளர் ரவூப் தெரிவித்தார் என தி ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது.

