ஜோகூர் பாரு: மலேசிய நீதிமன்றத்தில் 25 வயது சிங்கப்பூர் ஆடவர்மீது கொலைக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
பிரபல சவுத்கீ கடைத்தொகுதியில் முகமது அரிஃப் சையாடி என்ற ஆடவர், கடந்த மாதம், 32 வயது சியா ஹொன் சுங் என்ற ஆடவரின் கொலைக்குக் காரணமாக இருந்தார் என்று நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன.
சம்பவம் அதிகாலை 5.30 மணியளவில் நேர்ந்ததாகக் கூறப்படுகிறது.
குற்றஞ்சாட்டப்பட்ட ஆடவரை நீதிமன்றத்தில் எந்த வழக்கறிஞரும் பிரதிநிதிக்கவில்லை.
மாண்ட ஆடவரின் பிரேதப் பரிசோதனை முடிவுகளுக்காகக் காத்திருப்பதால் வழக்கு ஜூன் 3ஆம் தேதிவரை ஒத்திவைக்கப்பட்டது.
மற்றொரு வழக்கில், மற்றொரு சிங்கப்பூர் ஆடவருக்கு 1,700 ரிங்கிட் அபராதமும் நான்கு மாதச் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. ஷாஹித் நசரின் ஷா புல் பஹார் ஹுசைன் என்பவர் மற்றோர் ஆடவருக்குக் காயம் விளைவித்த குற்றச்சாட்டை எதிர்கொண்டார்.
குற்ற ஆவணம் படிக்கப்பட்டதை அடுத்து ஆடவர் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டதால் உடனடியாக அவருக்கான தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
சவுத்கீ கடைத்தொகுதியில் 26 வயது முகமது ஆடம் ஹைக்கல் ஸக்காரியா என்ற ஆடவரை ஷாஹித் நசரின் அதிகாலை 4.30 மணியளவில் கழிவறைக்கு அருகே தாக்கியதாகக் கூறப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
ஷாஹித்தைப் பிரதிநிதிக்க வழக்கறிஞர் யாரும் வராத நிலையில் தமக்கான அபராதத்தைக் குறைத்துக்கொள்ளும்படி நீதிமன்றத்தில் அவர் கேட்டுக்கொண்டார்.


