தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோலின் பதவிநீக்கம் தொடர்பான தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், அங்குள்ள சிங்கப்பூரர்கள் பதற்றம் எதுவுமின்றி அமைதியுடன் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தென்கொரியாவின் அரசியலமைப்பு நீதிமன்றம் ஏப்ரல் 4ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தீர்ப்பு வெளியிட உள்ள நிலையில் அங்கு பெரிய அளவிலான ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
தலைநகர் சோலில் அத்தகைய ஆர்ப்பாட்டங்கள் நிகழும் சாத்தியமுள்ள பகுதிகளைத் தவிர்க்குமாறு சிங்கப்பூரர்களைச் சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சு வலியுறுத்தி உள்ளது.
குறிப்பாக, அரசியலமைப்பு நீதிமன்றம், குவாங்வாமுன், சிட்டி ஹால், அதிபர் அலுவலகம், தேசிய நாடாளுமன்றம், ஹன்னாம்-டோங்கில் உள்ள அதிபரின் இல்லம் ஆகியவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சிங்கப்பூரர்கள் தவிர்க்க வேண்டும் என்று அமைச்சு கேட்டுக்கொண்டு உள்ளது.
நாட்டின் விழிப்புநிலை அளவை ஆக அதிகபட்ச நிலைக்கு தென்கொரிய காவல்துறை ஏப்ரல் 3ஆம் தேதி உயர்த்தியது.
ஒட்டுமொத்த காவல்துறையினரில் பாதிப்பேர் அவசரநிலை தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். ஆக உயர்மட்ட விழிப்புநிலை ஏப்ரல் 4ஆம் தேதி அறிவிக்கப்படும்.
அந்த நாளில் பார்வையாளர் மற்றும் வருகையாளர்களுக்கு அனுமதி இல்லை என்று தென்கொரியாவில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் அறிவித்துள்ளது. தென்கொரியாவில் உள்ள சிங்கப்பூரர்கள் அனைவரையும் வெளியுறவு அமைச்சுடன் இணையம் வாயிலாகப் பதிவு செய்யுமாறு அது கேட்டுக்கொண்டுள்ளது.
ஆர்ப்பாட்டங்களால் சுற்றுப்பயணிகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், கலாசார மையங்களான கியோங்போகுங், கொரிய தேசிய அருங்காட்சியக அரண்மனை, கொரிய தேசிய நாட்டுப்புற அருங்காட்சியகம் ஆகியன ஏப்ரல் 4ஆம் தேதி மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
மேலும், மக்கள் ஒன்றுகூடுவதைத் தடுக்கும் வகையில், ஏப்ரல் 4 முதல் ஏப்ரல் 8 வரை நடத்தத் திட்டமிடப்பட்ட யியோய்டோ செர்ரி பிளாசம் திருவிழாவும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
2024 டிசம்பர் 3ஆம் தேதி திடீரென்று அதிபர் யூன் ராணுவச் சட்டத்தை அறிவித்தார். ஆறு மணி நேரமே அந்த உத்தரவு நீடித்தது. அதனைத் தொடர்ந்து அவரை அதிபர் பதவியில் இருந்து நீக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.
இருப்பினும், நாடாளுமன்றத் தீர்மானத்தை அரசியலமைப்பு நீதிமன்றம் உறுதிசெய்ய வேண்டும். அது உறுதி செய்யப்படுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்பதற்கான தீர்ப்பு ஏப்ரல் 4 காலை 11 மணியளவில் (சிங்கப்பூர் நேரம் காலை 10 மணி) வெளியாக உள்ளது.

