கோலாலம்பூர்: மலேசியாவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதுடன் அபராதமும் செலுத்தாத வெளிநாட்டினரில் பெரும்பாலானோர் சிங்கப்பூரர்கள் என்று மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து விதிமுறைகளை மீறிய சிங்கப்பூரர்களுக்கு விதிக்கப்பட்ட ஏறத்தாழ 3.5 மில்லியன் ரிங்கிட் (S$1.04 மில்லியன்) இன்னும் செலுத்தப்படவில்லை என்று அவர்கள் கூறினர்.
1990ஆம் ஆண்டிலிருந்து இவ்வாண்டு ஜூன் மாதம் வரை கிட்டத்தட்ட 4 பில்லியன் ரிங்கிட் அபராதம் ( ஏறத்தாழ 41 மில்லியன் அழைப்பானைகள்) இன்னும் செலுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
கிட்டத்தட்ட 41 மில்லியன் அழைப்பாணைகளில் 51,128 அழைப்பானைகள் (கிட்டத்தட்ட 5.1 மில்லியன் ரிங்கிட்) மலேசியாவின் அண்டை நாடுகளான சிங்கப்பூர், புருணை, தாய்லாந்து ஆகியவற்றைச் சேர்ந்தோருடன் தொடர்புடையவை.
இன்னும் செலுத்தப்படாத அபராதங்கள் குறித்து சம்பந்தபட்டவர்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பிவைக்கப்படும் என்று மலேசியப் போக்குவரத்து விதிமீறல்கள் புலனாய்வு, அமலாக்கத்துறையின் இயக்குநர் முகம்மது யுஸ்ரி ஹசான் பாஸ்ரி தெரிவித்ததாக உத்துசான் மலேசியா நாளிதழ் ஆகஸ்ட் 13ஆம் தேதியன்று செய்தி வெளியிட்டது.
போக்குவரத்து விளக்கு சிவப்புக்கு மாறியும் வாகனத்தை நிறுத்தாமல் செல்வது, அவரசநிலையின்போது பயன்படுத்துவதற்கான சாலைத் தடத்தில் வாகனம் ஓட்டுவது, சாலையின் நடுவில் உள்ள இரட்டைக் கோட்டைக் கடந்து சென்று முன்னால் இருக்கும் வாகனத்தை முந்திக்கொண்டு செல்வது, வாகனம் ஓட்டிக்கொண்டே கைப்பேசியைப் பயன்படுத்துவது, வேக வரம்பை மீறி வாகனம் ஓட்டுவது போன்ற விதிமீறல்களுக்கான அபராதம் விதிக்கப்பட்டும் அபராதத் தொகை இன்னும் செலுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபராதத்தைச் செலுத்தாவிடில் மலேசியாவில் வாகனம் ஓட்ட தடை விதிக்கப்படலாம் என்று திரு முகம்மது யுஸ்ரி கூறியதாக உத்துசான் மலேசியா நாளிதழ் தெரிவித்தது.
அப்படி ஒரு நிலை ஏற்படுவதற்கு முன்பு அபராதத்தைச் செலுத்திவிட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
மேலும் அபராதத்தைச் செலுத்த காவல்நிலையத்துக்குச் செல்லத் தேவையில்லை என்றும் MyBayar செயலி மூலம் செலுத்திவிடலாம் என்றும் அவர் கூறினார்.
சாலை விதிமுறைகளை மீறும் வெளிநாட்டினர் மலேசியாவுக்குள் நுழையும்போது அல்லது மலேசியாவிலிருந்து புறப்பட்டுச் செல்லும்போது அவர்களைக் கண்டுபிடித்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தேவையான பணிகள் முடுக்கிவிடப்படும் என்று திரு முகம்மது யுஸ்ரி கூறினார்.
இன்னும் செலுத்தப்படாத அபராதத்தைச் செலுத்த ஊக்குவிக்கும் வகையில் தள்ளுபடிகள் வழங்குவது தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த திரு முகம்மது யுஸ்ரி, அத்தகைய ஏற்பாடுகள் குறிப்பிட்ட சிலருக்கு, குறிப்பிட்ட நேரத்தில் வழங்கப்படுவதாகக் கூறினார்.
“அபராதம் விதிக்கப்பட்ட தேதியிலிருந்து ஒரு மாதத்துக்குள் அபராதத் தொகையைச் செலுத்திவிட்டால் அபராதத் தொகையில் 50 விழுக்காட்டுத் தொகையை மட்டுமே செலுத்த வேண்டிவரும். இதுகுறித்து அழைப்பாணையின் பின்பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது,” என்றார் திரு முகம்மது யுஸ்ரி.