யுபிஎஸ் நிறுவனத்தின் 2026ஆம் ஆண்டுக்கான உலகளாவிய சொத்து அறிக்கையின்படி, அது கண்காணிக்கும் 56 சந்தைகளின் மொத்தச் சொத்து மதிப்பு அமெரிக்க டாலர் அடிப்படையில் 10.8 விழுக்காடு வளர்ச்சியடைந்தது.
அது 2024 அல்லது 2023ஆம் ஆண்டைவிட இருமடங்குக்கும் மேலான விரைவான வளர்ச்சியாகும். இருப்பினும், அந்த அறிக்கை ஒரு முக்கியச் சிக்கலைச் சுட்டிக்காட்டுகிறது.
அந்த 10.8 விழுக்காட்டு உயர்வு, பெரும்பணக்காரர்களின் லாபத்தைக் கொண்டு மட்டுமே மதிப்பிடப்பட்டது. சராசரிச் சொத்து மதிப்பு வெகுவாக உயர்ந்த அதே வேளையில், இடைநிலைச் சொத்து மதிப்பு பெரும்பாலான சந்தைகளில் சரிவைக் கண்டுள்ளது.
அந்த முரண்பாடு, ஆகப் பணக்காரர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையே வளர்ந்துவரும் இடைவெளியைச் சுட்டிக்காட்டுவதாக யுபிஎஸ் கூறுகிறது.
அமெரிக்காவைவிட சிங்கப்பூரின் புள்ளிவிவரங்கள் அவ்வளவு தீவிரமாக இல்லை என்றாலும், பிரச்சினை அதே அளவில்தான் உள்ளது என்று அறிக்கை காட்டுகிறது.
2025ஆம் ஆண்டில், உலகளவில் பெரியவர்களுக்கான சராசரிச் சொத்து மதிப்புக்கான பட்டியலில், US$527,217உடன் (S$680,000) சிங்கப்பூர் ஆறாவது இடத்தைப் பிடித்தது. ஆனால், இடைநிலைச் சொத்து மதிப்பில் அது US$96,434 பெற்று 20வது இடத்தில் மட்டுமே வந்தது.
அதன் காரணமாக, சராசரி - இடைநிலை மதிப்புக்கு இடையிலான விகிதம் 5.47 மடங்காகப் பதிவானது. யுபிஎஸ் ஆய்வில் உள்ள ஆசிய நாடுகளிலேயே அதுவே ஆகப்பெரிய இடைவெளியாகும்.
கடந்த ஆண்டு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் அல்லது அதற்கும் அதிகமான நிகரச் சொத்து மதிப்பு கொண்ட 244,000 செல்வந்தர்கள் சிங்கப்பூரில் இடம்பெற்றனர். அந்த எண்ணிக்கை 2024ஆம் ஆண்டைவிட 5,240 அதிகம்.
அவர்களில் கிட்டத்தட்ட 27,000 பேர் $5 மில்லியன் அமெரிக்க டாலர் முதல் $100 மில்லியன் அமெரிக்க டாலர் வரையிலான சொத்து மதிப்பைக் கொண்டிருந்தனர்.
அதிகமான நிகரச் சொத்து மதிப்பைக் கொண்ட பணக்காரர்களையும் குடும்ப அலுவலகங்களையும் உலகளாவிய மூலதனத்தையும் துடிப்புடன் ஈர்க்க, சிங்கப்பூர் பத்தாண்டுகளுக்கும் மேலாக மேற்கொண்ட முயற்சிகளையே இது எடுத்துக்காட்டுகிறது.
அந்தச் சொத்துகள் சராசரிச் சொத்து மதிப்பை மிக வேகமாக உயர்த்துகிறதே தவிர, சாதாரண மக்களின் இடைநிலைச் சொத்து மதிப்பில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

