சிங்கப்பூரின் மூலாதாரப் பணவீக்கம் அக்டோபரில் 2.1 விழுக்காட்டுக்குக் குறைந்துள்ளது. இது, ஏறக்குறைய மூன்று ஆண்டுகளில் இல்லாத சரிவாகும்.
கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த மூலாதாரப் பணவீக்கமும் ஒட்டுமொத்தப் பணவீக்கமும் அக்டோபரில் குறிப்பிடும்படி குறைந்துள்ளது.
தனியார் போக்குவரத்து, தங்குமிடச் செலவுகள் நீங்கலாகக் கணக்கிடப்படும் மூலாதாரப் பணவீக்கம் குடும்பச் செலவுகளைப் பிரதிபலிக்கிறது. இது, செப்டம்பர் மாத 2.8 விழுக்காட்டிலிருந்து ஆண்டு அடிப்படையில் 2.1 விழுக்காட்டுக்குக் குறைந்தது. இதுதான், 2021 டிசம்பர் மாதத்துக்குப் பிறகு பதிவான ஆகக் குறைவான பணவீக்கமாகும்.
சேவைத் துறை, மின்சாரம், எரிவாயு போன்றவற்றின் விலை மிதமாக அதிகரித்ததே மூலாதாரப் பணவீக்கம் குறைந்ததற்கு காரணம் என்று நவம்பர் 25ஆம் தேதி வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
ஒட்டுமொத்தப் பணவீக்கம் ஆண்டு அடிப்படையில் அக்டோபரில் 1.4 விழுக்காட்டுக்குக் குறைந்தது. தங்குமிடத்திற்கான பணவீக்கம் மற்றும் தனியார் போக்குவரத்துச் செலவுகள் குறைந்ததே இதற்கு காரணம்.
மாதாந்தர அடிப்படையில் மூலாதாரப் பணவீக்கமும் ஒட்டுமொத்த பணவீக்கமும் 0.3 விழுக்காடு சரிந்தது.
மெதுவடைந்துள்ள சேவைத் துறையால் தற்போதுள்ள பணவீக்கத்தின் போக்கு எஞ்சிய இவ்வாண்டில் மேலும் குறையும் என்று வர்த்தக, தொழில் அமைச்சும் சிங்கப்பூர் நாணய ஆணையமும் தெரிவித்துள்ளன.
2025ஆம் ஆண்டில் தங்குமிடத்திற்கான பணவீக்கம் மேலும் குறைவதை எதிர்பார்க்கலாம். இது, தனியார் போக்குவரத்து பணவீக்கத்தில் எதிர்பார்க்கப்படும் அதிகரிப்பை ஓரளவு ஈடுசெய்யும் என்று இரு அமைப்புகளும் கூறியுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
இவற்றை கருத்தில்கொண்டால் ஒட்டுமொத்த பணவீக்கம் 2024ஆம் ஆண்டு முழுவதும் 2.5 விழுக்காடாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2025ஆம் ஆண்டில் இது, சராசரியாக 1.5 விழுக்காடு முதல் 2.5 விழுக்காடு வரை இருக்கலாம்.