பேங்காக்: தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கின் வாங்வியான் யாய் பகுதிக்கு அருகே உள்ள கட்டுமானத் தளத்துக்கு அருகே 30 மீட்டர் சுற்றுப்பரப்பில் இருக்கும் வர்த்தகக் கட்டடங்களிலிருந்து கிட்டத்தட்ட 60 பேர் வேளியேற்றப்பட்டனர்.
வெளியேற்றப்பட்டவர்கள் சுமார் ஒரு வாரத்துக்குத் தற்காலிகத் தங்குமிடங்களில் இருப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிராதிபோர் ரோடு, பான் கெயக் சந்திப்பு ஆகியவற்றுக்கு இடையிலான ஏறத்தாழ 200 மீட்டர் நீளம் கொண்ட பகுதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டிருக்கிறது.
அருகே உள்ள கட்டடங்களில் அந்தந்த நேரத்தில் நடக்கும் சம்பவங்களை அடையாளம் காண்பதற்கான உணர்க்கருவிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. கட்டடக் கட்டமைப்பு தொடர்பில் மேலும் அபாயங்கள் ஏதேனும் இருந்தால் அவற்றை அடையாளம் காண்பது நோக்கமாகும்.
சம்பந்தப்பட்ட பகுதியில் நீர்க் கசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அந்தக் கசிவால் சுற்றியிருந்த மணல் நிலத்தடிக் கட்டமைப்புக்குள் போனது. அதனால் நிலமும் சாலைப் பகுதியும் கீழே இறங்கி குழி உருவானதால் அக்கம்பக்கத்துக் கட்டடங்களின் நிலை குறித்து கவலைகள் எழுந்தன.
பேங்காக் ஆளுநரும் சாட்சார்ட் சிட்டிப்புட் மற்றும் துணை ஆளுநர் விசானாவ் சப்சும்போன் உள்ளிட்டோர் வியாழக்கிழமை (ஜூலை 9) அந்தப் பகுதியைச் சோதனையிட்டனர்.
நீரின் அளவு குறையத் தொடங்கிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதேவேளை, நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
அந்தப் பகுதிவாசிகள் தற்காலிகத் தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டனர். ஹோட்டல்கள் உள்ளிட்ட தற்காலிக இடங்களுக்கு அவர்கள் இடம் மாற்றப்பட்டனர்.
பேங்காக்கின் ரயில் பாதைக் கட்டுமானப் பணிகளில் இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதனால், தாய்லாந்தின் எம்ஆர்டிஏ எனும் ரயில் சேவை நிறுவனத்துக்குக் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனம் பாதிக்கப்பட்டோருக்கான தற்காலிகத் தங்கும் வசதிகளுக்கான செலவை ஏற்றுக்கொள்கிறது.
சுற்றியுள்ள கட்டடங்கள், உள்கட்டமைப்புகள் ஆகியவற்றின் நிலைத்தன்மையை ஆராய்ந்த பிறகு பாதிக்கப்பட்ட வட்டாரவாசிகள் திரும்பிவர அனுமதிக்கப்படுவர் அல்லது கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

