ஈப்போ: மலேசியாவின் பேராக் மாநிலத்தில் தோன்றிய ஆழ்குழியால், இரண்டு தரைவீடுகளின் தாழ்வாரங்கள் சரிந்தன. வேறு இரண்டு வீடுகளுக்கும் சிறிது சேதம் ஏற்பட்டுள்ளது.
செப்டம்பர் 28ஆம் தேதி இரவு 7 மணியளவில் கனமழை பெய்ததை அடுத்து, இரண்டு வீடுகளின் தாழ்வாரங்களின் பெரும்பகுதி சரிந்து விழுந்ததாக பேராக் தீயணைப்பு, மீட்புப் படையின் உதவி இயக்குநர் சாபாரோட்ஸி நூர் அகமது தெரிவித்தார்.
ஒரு வீட்டில் கணவனும் மனைவியும் இருந்தனர். மற்றொரு வீட்டில் யாரும் இல்லை என்றும் கூறப்பட்டது.
“வீடுகள் எதுவும் சரிந்து விழவில்லை. அத்துடன், இச்சம்பவத்தால் எவருக்கும் காயங்களும் இல்லை,” என்று திரு சாபாரோட்ஸி கூறினார்.
நிலைமையைத் தீயணைப்பு அதிகாரிகள் மதிப்பிட்டதுடன் பாதிக்கப்பட்ட வீடுகளின் கட்டமைப்பு உறுதித்தன்மையையும் கண்காணித்தனர் என்றார் அவர்.
இதையடுத்து, குடியிருப்பாளர்கள் வீடுகளிலிருந்து வெளியேறி வேறு பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதன்படி, கணவனும் மனைவியும் அங்கிருந்த வெளியேறிவிட்டதாகக் கூறப்படுகிறது.

