சோல்: தென்கொரியத் தலைநகர் சோலில் சாலை ஒன்றில் குழி உருவானது.
அக்குழியில் கார் ஒன்று விழுந்ததால் அதிலிருந்த இருவர் காயமுற்றனர். இச்சம்பவம் வியாழக்கிழமையன்று (ஆகஸ்ட் 29) நிகழ்ந்தது.
சோலின் மேற்குப் பகுதியில் உள்ள சியோடேமுன் வட்டாரத்தில் சாலையில் குழி உருவானது என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. அந்த கார் கவிழ்ந்து குழிக்குள் விழுந்ததாகவும் அதில் இருவர் இருந்ததாகவும் கொரியா ஹெரால்ட் ஊடகம் தெரிவித்தது. 70 வயதைத் தாண்டிய மாது ஒருவரும் 80 வயதைத் தாண்டிய ஆடவர் ஒருவரும் காயமுற்றனர் என்றும் அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர் என்றும் கொரியா ஹெரால்ட் கூறியது.
சம்பவ இடத்திற்குப் பிறர் செல்லாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக கொரியா ஜூங்அங் டெய்லி தெரிவித்தது.

