தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘கப்பல் மூழ்கியதற்கும் கேப்டனின் பாலினத்திற்கும் தொடர்பில்லை’

1 mins read
கடற்படைக் கப்பல் மூழ்கியது குறித்துத் தற்காப்பு அமைச்சர்
dc985fcd-f8cf-4f1d-b4f9-5e889db3caaf
நியூசிலாந்தின் தற்காப்பு அமைச்சர் ஜுடித் கோலின்ஸ். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

வெலிங்டன்: நியூசிலாந்துக் கடற்படைக் கப்பல் சென்ற வாரயிறுதியில் மூழ்கியதை அடுத்து அதன் கேப்டனை இணையத்தில் பழித்துப்பேசும் போக்கை அந்நாட்டுத் தற்காப்பு அமைச்சர் ஜுடித் கோலின்ஸ் கண்டித்துள்ளார்.

மூழ்கிய கப்பலின் கேப்டன் ஒரு பெண் என்பதால் அதுகுறித்து இணையத்தில் பழிகூறல்கள் தொடரும் வேளையில், அக்டோபர் 10ஆம் தேதி அமைச்சரின் கண்டனம் வெளிவந்துள்ளது.

கப்பல் மூழ்கியதற்கான காரணம் இன்னும் தெரியாத நிலையில் அதன் கேப்டனின் பாலினத்திற்கும் கப்பல் மூழ்கியதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றார் அவர்.

அக்டோபர் 6ஆம் தேதி ஆய்வுப்பணியில் ஈடுபட்டிருந்த மனாவானுய் கப்பல், கடலடிப் பாறையில் மோதி மூழ்கியது.

அதையடுத்து அதிலிருந்த 75 சிப்பந்திகளும் பயணிகளும் உயிர்காப்புப் படகுகள் மூலம் கப்பலிலிருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டது. பின்னர் அவர்கள் மீட்கப்பட்டனர்.

இச்சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிய ஆழமான விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. நவம்பர் மாத மத்தியில் இடைக்கால அறிக்கை வெளியிடப்படும் என்றும் இறுதி அறிக்கை பொதுமக்களின் பார்வைக்குக் கிடைக்கும் என்றும் நியூசிலாந்துத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.

இவ்வேளையில் கப்பல் கேப்டன் பெண் என்பதால் பழித்துப் பேசப்படுவது தமக்கு திகைப்பையும் அதிர்ச்சியையும் அளிப்பதாகத் திருவாட்டி கோலின்ஸ் கூறினார்.

இச்சம்பவத்துக்குப் பிறகு சீருடை அணிந்த பெண் அதிகாரிகளைச் சிலர் வீதிகளில் அவமதிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

நியூசிலாந்து நெடுங்காலமாகவே பாலின சமத்துவத்துக்குப் பெயர்பெற்ற நாடு. பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய முதல் நாடு அது என்பது நினைவுகூரத்தக்கது.

குறிப்புச் சொற்கள்