புனித நாளை அவமதித்த சுற்றுலாப் பயணிக்கு பாலியில் சிறைத்தண்டனை

புனித நாளை அவமதித்த சுற்றுலாப் பயணிக்கு பாலியில் சிறைத்தண்டனை

1 mins read
029972a3-ff70-49fd-a2f7-51b7326de439
லூசியன் ஆண்ட்ரின் ஸக்ராகன், 26, என்ற இந்த சுவிட்சர்லாந்து ஆடவர் ஆகஸ்ட் 20ஆம் தேதி பாலி நீதிமன்றத்திலிருந்து முகத்தை மூடியபடி அழைத்துச் செல்லப்பட்டார். - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

பாலி: இந்தோனீசியாவின் பாலித்தீவில் இந்து சமயத்தின் புனிதமான மௌன நாளை அவமதித்த சுவிட்சர்லாந்துச் சுற்றுப்பயணிக்கு ஓராண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

லூசியன் ஆண்ட்ரின் ஸக்ராகன் என்ற அந்த 26 வயது ஆடவர், மௌன நாளன்று ஆள்நடமாட்டமில்லாத கடற்கரையில் நடந்து சென்று காணொளி எடுத்தார். அதனைத் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் தவறான சொற்களுடன் பதிவிட்டார். இந்தச் சம்பவம் உள்ளூர் மக்களிடையே கடுங்கோபத்தை ஏற்படுத்தியது.

பாலியில் மௌன நாளின்போது மக்கள் அனைவரும் வீடுகளிலேயே இருக்க வேண்டும்; அமைதி காக்க வேண்டும். அன்றைய நாளில் விமான நிலையச் சேவைகள் முடக்கப்படும்; இணையச் சேவையும் கேளிக்கை நடவடிக்கைகளும் கட்டுப்படுத்தப்படும். மின்சாரத்தைப் பயன்படுத்துவதும் ஊக்குவிக்கப்படுவதில்லை.

இந்த விதிகளும் கட்டுப்பாடுகளும் சுற்றுப்பயணிகளுக்கும் பொருந்தும்.

இவ்வாண்டு மார்ச் 19ஆம் தேதி அங்கு மௌன நாள் கடைப்பிடிக்கப்பட்டது.

நீதிமன்ற விசாரணையின்போது, பாலி மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக ஸக்ராகன் மன்னிப்பு கேட்டார். இருப்பினும், பொதுமக்களின் சமய உணர்வை வெளிப்படையாக அவமதித்ததால் அவருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அண்மைக்காலமாக பாலித்தீவிற்குச் சுற்றுப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. அதேவேளையில், அவர்களின் ஒழுங்கீன நடத்தைகளும் அதிகரித்துள்ளன. இதனால், விதியை மீறும் வெளிநாட்டவர்கள்மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பாலி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்