ஜோகூர் பாரு: ஜோகூரின் கங்கார் புலாய் வட்டாரத்தில் எரிக்கப்பட்ட வீட்டில் ஆறு பேர் கொல்லப்பட்டதைக் காவல்துறையினர் உறுதிசெய்திருக்கின்றனர்.
அவர்களில் மூவர் பிள்ளைகள். ஒருவர் பதின்ம வயதினர்.
எரிந்த சடலங்கள் பற்றி 48 வயது ஆடவர் ஜனவரி 9ஆம் தேதி கண்டுபிடித்துச் சொன்னதாக ஜோகூர் காவல்துறைத் தலைவர் அப் ரஹமான் அர்சாட் கூறினார். ஆடவர், மனைவியையும் பிள்ளைகளையும் தேடிக்கொண்டிருந்ததாகக் கூறப்பட்டது. தம்பதியர் பிரிந்த பிறகு, மனைவியும் பிள்ளைகளும் அங்கு வசித்துவந்ததாகத் தெரிகிறது. ‘த ஸ்டார்’ ஊடகம் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 3) அந்தத் தகவலை வெளியிட்டது.
முக்கியச் சாலையிலிருந்து கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பனை எண்ணெய்த் தோட்டத்தில் வீடு அமைந்துள்ளது. அதில் தண்ணீர், மின்சார வசதிகள் இல்லை.
“மாண்டவர்களின் வயது இரண்டு, ஐந்து, ஒன்பது, 17, 29, 35 என்று பிரேதப் பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. அவர்களில் சிறுவன் ஒருவனும் சிறுமிகள் மூவரும் இருந்தனர். அவர்களில் எவரும் எந்தப் பள்ளியிலும் பதிவுசெய்யப்படவில்லை,” என்றார் காவல்துறைத் தலைவர்.
இம்மாதம் 21ஆம் தேதி, இஸ்கந்தர் புத்திரியின் சுற்றுவட்டாரத்தில் 19க்கும் 35 வயதுக்கும் இடைப்பட்ட சந்தேக நபர்கள் நால்வர் கைதுசெய்யப்பட்டனர்.
அவர்கள் மாண்டவர்களின் உறவினர்கள் அல்லர் என்று திரு அப் ரஹமான் தெரிவித்தார். காணாமற்போன ஒருவருடன் போதைப்பொருள்களை அவர்கள் பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
சந்தேக நபர்களில் மூவர், மெத்தம்ஃபெட்டமைன் உட்கொண்டது சிறுநீர்ப் பரிசோதனைகளில் தெரியவந்தது. அவர்கள் ஏற்கெனவே குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகவும் ஆவணங்கள் காட்டுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
ஆடவர்கள் இருவர்மீது புதன்கிழமை (பிப்ரவரி 4) நீதிமன்றத்தில் கொலைக்குற்றம் சாட்டப்படும்.
மற்ற இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அரசாங்கத் தரப்புக்காகச் சாட்சியம் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

