பெட்டாலிங் ஜெயா: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரின் புடு பகுதியில் அனுமதியின்றி மருத்துவச் சேவைகள் வழங்கிய 18 வெளிநாட்டு ஆடவரைக் குடிநுழைவுத்துறை கைதுசெய்தது.
அவர்களில் அறுவர் போலி மருத்துவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.
ஜாலான் துன் டான் சியூ சுற்றுவட்டாரத்தில் ஒன்பது இடங்களில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 13) மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின்போது அவர்கள் பிடிபட்டதாகக் குடிநுழைவுத் துணைத் தலைமைச் செயல்பாட்டு இயக்குநர் லோக்மான் எஃபண்டி ராம்லி கூறினார்.
அவர்களில் 17 பேர் பங்ளாதேஷியர், ஒருவர் மியன்மாரைச் சேர்ந்தவர். அவர்கள் 24 முதல் 51 வயதிற்குட்பட்டவர்கள்.
அவர்கள் புலம்பெயர்ச் சமூகத்திற்கு மட்டும் மருத்துவச் சேவை வழங்கியதாகத் திரு லோக்மான் தெரிவித்தார்.
இரு வாரக் கண்காணிப்பிற்குப் பிறகு, கோலாலம்பூர் சுகாதாரத் துறையின் மருந்தக அமலாக்கப் பிரிவுடன் இணைந்து குடிநுழைவுத் துறை அந்த ஒன்பது இடங்களில் சோதனை மேற்கொண்டது.
“முன்புறம் சில்லறை விற்பனைக் கடைகள், உணவகங்கள், துணிக்கடைகள், பயண முகவை முகப்புகள், முடிதிருத்தகங்கள் போன்று அந்த வளாகங்கள் செயல்பட்டன. பின்பகுதி தற்காலிக மருத்துவ ஆலோசனை அறைகளாகவும் சட்டவிரோத மருந்துகளுக்கான சேமிப்பிடங்களாகவும் மாற்றப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது,” என்று அவர் விளக்கினார்.
குறைந்த கட்டணம், அறிந்த மொழி போன்ற காரணங்களால் பங்ளாதேஷியர் பலரும் அந்தச் சட்டவிரோத மருத்துவச் சேவை நிலையங்களை நாடியதாக அவர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
மருத்துவ வல்லுநர்களின் பரிந்துரை தேவைப்படும் மருந்துகளையும் அவை விநியோகித்ததாகக் கூறப்பட்டது.
“பறிமுதல் செய்யப்பட்டவற்றில் நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, கொழுப்பு, நுண்ணுயிர்க்கொல்லி, வலிநீக்கி போன்றவற்றுக்கான, சுகாதாரத் துறையால் அங்கீகரிக்கப்படாத மருந்துகளும் அடங்கும்,” என்று திரு லோக்மான் தெரிவித்தார்.

