தோக்கியோ: ஜப்பானின் வடக்குப் பகுதியை திங்கட்கிழமையன்று (ஏப்ரல் 20) சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியது. இதில் குறைந்தது ஆறு பேர் காயமடைந்ததாக செவ்வாய்க்கிழமையன்று (ஏப்ரல் 21) தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 80 சென்டிமீட்டர் வரையிலான சுனாமி அலைகளை ஏற்படுத்திய இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவிலான சேதங்கள் எதுவும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.
இருப்பினும், வடஇவாட்டே மாநிலத்துக்கு அருகில் உள்ள பசிபிக் பெருங்கடல் பகுதியில் திங்கட்கிழமையன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சில மணிநேரங்களில், மாபெரும் நிலநடுக்கம் ஒன்று, அதாவது 8.0 அல்லது அதற்கும் கூடுதலான ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்படுவதற்கான அபாயம் அதிகரித்துள்ளதாக ஜப்பானிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் மிகவும் தீவிரமாக இருந்ததால், மையப்பகுதியிலிருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தலைநகர் தோக்கியோவில் உள்ள பெரிய கட்டடங்களும் ஆட்டங்கண்டன.
செவ்வாய்க்கிழமை ஜப்பானிய நேரப்படி காலை 8 மணி (சிங்கப்பூர் நேரப்படி காலை 7 மணி) ஆறு பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் ஜப்பானிய தீயணைப்பு, பேரிடர் நிர்வாகத் துறை அறிக்கை வெளியிட்டது.
மூன்று மீட்டர் உயரம் வரை சுனாமி அலைகள் எழக்கூடும் என ஜப்பான் எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால், இவாட்டேயில் உள்ள குஜி துறைமுகத்தை 80 சென்டிமீட்டர் அலை தாக்கிய சில மணி நேரங்களில் அந்த எச்சரிக்கை மீட்டுக் கொள்ளப்பட்டது.

