நைரோபி: ஆப்பிரிக்க நாடான கென்யாவில் திங்கட்கிழமை (ஜூன் 9) நேர்ந்த சாலை விபத்தில் 18 மாதக் குழந்தை உட்பட இந்தியர் அறுவர் உயிரிழந்தனர்; மேலும் 27 பேர் காயமுற்றனர்.
ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடுவதற்காக கத்தாரிலிருந்து சென்ற சுற்றுப்பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்திற்குள்ளானது.
நகுரு எனும் பகுதியிலிருந்து நியாகுருரு எனுமிடத்தில் உள்ள விடுதிக்குச் சுற்றுப்பயணிகள் சென்றபோது அவ்விபத்து நேர்ந்தது. அவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து பெருமழை காரணமாக கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாகவும் அது பலமுறை உருண்டு அருகிலிருந்த பள்ளத்தில் விழுந்ததாகவும் கென்ய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
சம்பவ இடத்திலேயே அறுவர் மாண்டுபோனதாகக் கூறப்பட்டது. அவர்களில் ஐவர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
காவல்துறையினரும் உள்ளூர்வாசிகளும் இணைந்து, காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
காயமுற்ற அனைவரும் தற்போது நியாகுருருவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
பாலக்காட்டைச் சேர்ந்த 41 வயது ரியாவும் அவரது ஏழு வயது மகள் தைராவும் மாண்டவர்களில் அடங்குவர். அவருடைய கணவர் ஜோயலும் மகன் ரவிசும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து நேர்வதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன், தாங்கள் விடுதிக்குத் திரும்பிக்கொண்டிருப்பதாக ரியா தொலைபேசி வழியாகத் தம் குடும்பத்தினரிடம் தெரிவித்ததாக கேரள ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட படங்களில், பேருந்தின் கூரைப்பகுதி தனியே கழன்று விழுந்து கிடப்பது விபத்தின் கடுமையைக் காட்டுவதாக உள்ளது.
மலைப்பாதையில் சீராகச் சென்ற பேருந்து, மழை தொடங்கியதும் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, ஓரத்திலிருந்த மரத்தின்மீது மோதி, பின்னர் பள்ளத்தில் விழுந்தது என்று அதனை நேரில் கண்டவர்கள் கூறியதாக ‘ஈஸ்ட் லீ வாய்ஸ்’ எனும் கென்ய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.