தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சவூதி அரேபியப் பேருந்து விபத்தில் இந்தோனீசிய உம்ரா யாத்திரிகர்கள் அறுவர் உயிரிழப்பு

1 mins read
02c6e35b-7f93-4fd6-af3d-72e2877d01c1
உம்ரா யாத்திரைக்காக சவூதி அரேபியா செல்வோரின் எண்ணிக்கை அடிப்படையிலான பட்டியலில் முன்னணியில் இருக்கும் நாடுகளில் இந்தோனீசியாவும் அடங்கும். - படம்: ராய்ட்டர்ஸ்

ஜகார்த்தா: உம்ரா யாத்திரைக்காக சவூதி அரேபியா சென்றிருந்த இந்தோனீசியர்கள் அறுவர் வியாழக்கிழமை (மார்ச் 20) நடந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தனர். மேலும் 14 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்தோனீசிய வெளியுறவு அமைச்சு இத்தகவலை வெளியிட்டது.

மெக்கா நகருக்கும் மதினா நகருக்கும் இடையிலான சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்து வியாழக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் விபத்துக்குள்ளானது. அந்த இடம் ஜெட்டாவிலிருந்து ஏறக்குறைய 150 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

சம்பவத்தில் தலைகீழாகக் கவிழ்ந்த பேருந்தில் தீப்பற்றியதாக அமைச்சு கூறியது.

காயமடைந்தோர் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றதாகக் கூறப்பட்டது.

ஜெட்டாவில் உள்ள இந்தோனீசியத் துணைத் தூதரகம் அதன் குடிமக்கள் பாதுகாப்புப் பிரிவுக் குழுவினரைச் சம்பவ இடத்திற்கு அனுப்பி, பாதிக்கப்பட்டோருக்குத் தேவைப்படும் உதவிகளை ஒருங்கிணைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட இந்தோனீசியக் குடிமக்கள், அவர்களின் குடும்பத்தார் குறித்த முழுமையான விவரங்களைத் திரட்டுவதில், சமய விவகாரங்களுக்கான அமைச்சு, உம்ரா யாத்திரை முகவர் நிறுவனம் ஆகிய தரப்புகளுடன் இணைந்து பணியாற்றுவதாக இந்தோனீசிய வெளியுறவு அமைச்சு கூறியது.

உயிரிழந்தோரில் ஒருவர் உயர்நிலை ஒன்றாம் வகுப்பு மாணவியான ஆட்ரியா மாலிகா ஆடம் என்றும் அவர் தன் தாய், தந்தை, உடன்பிறந்தவர் ஆகிய மூவருடன் உம்ரா பயணம் மேற்கொண்டதாகவும் தெரிகிறது. உயிரிழந்த அறுவரில் அவர்கள் நால்வரும் அடங்குவர்.

பான்டெனில் (Banten) உள்ள ‘இன்சான் செண்டெகியா மதானி’ இஸ்லாமியச் சமயப் பள்ளி, மாணவி ஆட்ரியாவும் அவரது குடும்பத்தினரும் உம்ரா பயணத்தின்போது உயிரிழந்தது குறித்து ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்