சிறுவனைச் சுற்றிவளைத்த 6 மீட்டர் நீள மலைப்பாம்பு

2 mins read
049bda92-167e-4f56-be37-5f0727818f88
30 நிமிடப் போராட்டத்துக்குப் பிறகே சிறுவனை மீட்டதாக அவனது உறவினர் ஒருவர் கூறினார். - சித்திரிப்புப் படம்: பிக்சாபே

கோலாலம்பூர்: மலேசியாவின் பெக்கான் நகரில் வியாழக்கிழமை (ஜனவரி 8), மலைப்பாம்பின் பிடியில் சிக்கிக்கொண்ட 10 வயதுச் சிறுவன் கடுமையான போராட்டத்துக்குப்பின் மீட்கப்பட்டான்.

காலை 6.30 மணியளவில் அருகிலிருந்த உறவினரின் வீட்டுக்குச் சென்ற அப்துல் ரஃப்கா அஸ்கா அப்துல்லா என்ற அச்சிறுவன் தெரியாமல் அங்கிருந்த மலைப்பாம்பை மிதித்துவிட்டான்.

அதையடுத்து, 6 மீட்டர் நீளமும் கிட்டத்தட்ட 50 கிலோ எடையும் கொண்ட அந்த மலைப்பாம்பு அவனைச் சுற்றிவளைத்தது.

சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு, தங்கள் வீட்டருகே நின்றிருந்த அவனது சகோதரர் முகமது நுக்மான் முகமது நிஸாம், 26, ஓடிச் சென்றார்.

“நான் சென்றபோதே அவனது காலிலிருந்து உடல்வரை அந்தப் பாம்பு சுற்றி வளைத்திருந்தது. அதன் வாய் என் தம்பியின் வலது காலைக் கவ்வியிருந்ததால் அவன் காலிலிருந்து ரத்தம் வழிந்தது,” என்றார் அவர்.

மலைப்பாம்பிடமிருந்து தம்பியை விடுவிக்க அவர் மேற்கொண்ட முயற்சி பயனளிக்கவில்லை. மாறாக, சகோதரர்கள் இருவரும் தரையில் விழ நேரிட்டது. பாம்பு தன்னையும் சுற்றி வளைக்கக்கூடும் என்று அஞ்சிய முகமது நுக்மான் உதவிக்குரல் எழுப்பினார்.

அந்த வீட்டினுள் இருந்த உறவினர் ரம்ஸி முகமது அமின், 57, விரைந்து வந்து மலைப்பாம்பின் வாயைத் தன் கைகளால் அகலத் திறந்து சிறுவனை விடுவிக்க முயன்றார். அந்த முயற்சியின்போது அவரது விரல்களில் காயம் ஏற்பட்டது.

பின்னர் கூர்மையான பொருள் ஒன்றை எடுத்துப் பாம்பின் வாயை அவர் திறந்தார். கிட்டத்தட்ட 30 நிமிடங்களுக்குப்பின் பாம்பின் பிடியிலிருந்து சிறுவன் மீண்டான்.

காலில் ஏற்பட்ட காயங்களுக்குச் சிகிச்சை பெற அவன் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டான்.

அருகிலிருந்த புதர்கள் அல்லது ரப்பர் தோட்டத்திலிருந்து அந்த மலைப்பாம்பு வந்திருக்கக்கூடும் என்றார் திரு ரம்ஸி.

குறிப்புச் சொற்கள்