ஜெருசலம்: இஸ்ரேலின் ஜெருசலம் புறநகரில் உள்ள ஒரு பேருந்து நிறுத்தத்தில் திங்கட்கிழமை (செப்டம்பர் 8) இரு பாலஸ்தீன துப்பாக்கிக்காரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஆறு பேர் கொல்லப்பட்டனர்.
காவல்துறையினர் இதனை ‘பயங்கரவாதத் தாக்குதல்’ என வர்ணித்தனர். அண்மைக் காலத்தில் நடந்த தாக்குதல்களில் இது மிக மோசமானது எனக் கருதப்படுகிறது.
அவசரகால மருத்துவச் சேவைப் பிரிவு, கொல்லப்பட்ட அந்த ஆறு பேரில் ஐவரை அடையாளம் கண்டுள்ளது. அவர்களில் 50 வயது ஆடவர், 50களில் இருந்த பெண், 30களில் இருந்த மூன்று ஆடவர்கள் அடங்குவர்.
மேலும், 11 பேருக்கு துப்பாக்கிச்சூடு காயங்கள் ஏற்பட்டன. அவர்களில் ஆறு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் கிதியோன் சார், ஆறாவது நபரும் உயிரிழந்துவிட்டதாக பின்னர் தெரிவித்தார். துப்பாக்கிச்சூடு நடத்தியோர், இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ள மேற்கு கரையைச் சேர்ந்த பாலஸ்தீனர்கள் என்று அவர் கூறினார்.
பாலஸ்தீனப் போராளி குழுவான ஹமாஸ், தாக்குதலை நடத்திய இரு பாலஸ்தீன ‘எதிர்ப்புப் போராளிகளை’ப் பாராட்டியது. எனினும், தாக்குதலுக்கு தான் பொறுப்பு என்று அது நேரடியாகக் கூறவில்லை. மற்றொரு பாலஸ்தீனப் போராளி குழுவான இஸ்லாமிய ஜிஹாத்தும் இந்தத் துப்பாக்கிச்சூட்டைப் பாராட்டியது.
தாக்குதல் நடந்த இடத்திற்குச் சென்று பேசிய இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு, துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களுக்கு உதவிய சந்தேக நபர்களை இஸ்ரேலியப் படைகள் தேடி வருவதாகக் கூறினார்.
இஸ்ரேலிய ராணுவம், அந்தப் பகுதிக்குப் படைகளை அனுப்பியதாகவும் சந்தேக நபர்களைத் தேடும் பணியில் காவல்துறைக்கு உதவுவதாகவும் தெரிவித்தது.

