இந்தோனீசிய சாலை விபத்தில் ஆறு சிங்கப்பூரர்கள் காயமடைந்தனர்

இந்தோனீசிய சாலை விபத்தில் ஆறு சிங்கப்பூரர்கள் காயமடைந்தனர்

காயமுற்றோருக்கு சிங்கப்பூரின் துணைத் தூதரக உதவி வழங்கப்படுகிறது
படம்: RADIOELSHINTA/X

11 May 2026 - 10:38 am

1 mins read

கிழக்கு ஜாவா: இந்தோனீசியாவின் புகழ்பெற்ற ‘புரோமோ’ எரிமலையைக் காணச் சென்ற சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற சிறிய வேன் ஒன்று, கீழ்நோக்கிச் சென்ற சாலையில் தடம்புரண்டு ஒரு விளக்குக் கம்பத்தில் மோதி நின்றது.

சம்பவம் சனிக்கிழமை (மே 9) காலை 11.45 மணியளவில் கிழக்கு ஜாவாவில் உள்ள ‘புரோபோலிங்கோ’ என்ற பகுதியில் இருக்கும் ‘ஙாடாஸ்’ என்ற கிராமத்தில் நடந்ததாக உள்ளூர் வட்டாரக் காவல்துறை குறிப்பிட்டது.

Watch on YouTube

அந்த வாகனத்தில் இருந்த எட்டு நபர்களில் அறுவர் சிங்கப்பூரர்கள். சுற்றுலாப் பயணிகளோடு குறுகலான பாதையில் வாகனம் சென்றுகொண்டிருந்தபோது அது கட்டுப்பாட்டை இழந்தது.

வாகனத்தின் ‘பிரேக்’ எனப்படும் வேகத் தடுப்புச் சாதனம் சரிவர இயங்காததால் விபத்து நிகழ்ந்தது என்று விசாரணையில் தெரியவந்தது.

விபத்தில் மேலும் மூன்று வாகனங்களை அந்த வேன் மோதிச் சென்றதாக இந்தோனீசிய ஊடகம் தெரிவித்தது.

வாகனத்தில் இருந்த பயணிகளுக்கு முகங்கள் உள்பட உடலில் சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிகிறது. அவர்களை அந்தக் கிராம மக்கள் வாகனத்தில் இருந்து வெளியேற்றி, மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

விபத்து குறித்து உள்ளூர் காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு விசாரணை நடத்துகிறது.

பாதிக்கப்பட்ட சிங்கப்பூரர்களுக்குத் துணைத் தூதரக உதவி வழங்கப்படுகிறது.

மிகவும் அழகான இயற்கை வளங்கள் சூழ்ந்த அந்த எரிமலையைக் காணப் பல சுற்றுலாப் பயணிகள் அங்கு வந்து செல்வது வழக்கம்.

குறிப்புச் சொற்கள்