மடக்குமேசையில் சிக்கி ஆறு வயதுச் சிறுமி உயிரிழப்பு

1 mins read
4c685498-747b-496c-be06-74f06c59abc6
சம்பவம் நேர்ந்த வீட்டில் விசாரணை மேற்கொள்ளும் காவல்துறையினர். - படம்: சினார் ஹரியான்

நிபோங் தெபால்: வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தபோது மடக்குமேசையின் கால்களுக்கு இடையில் மாட்டிக்கொண்டதால் ஆறு வயதுச் சிறுமி உயிரிழந்த சம்பவம் மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் நேர்ந்தது.

நூர் அகிஃபா ஹுமைரா அப்துல்லா என்ற அச்சிறுமி, புத்தாண்டு நாளன்று மாலை 4.15 மணியளவில் தாமான் ஸ்ரீ புத்ராவில் உள்ள தமது வீட்டிற்கு வெளியே தனியாக விளையாடிக்கொண்டிருந்ததாகக் கூறப்பட்டது.

அவளுடைய தாயாரும் உடன்பிறப்புகளும் வீட்டினுள் இருந்தனர். வீட்டின் பின்புறத்திலிருந்து எந்தச் சத்தமும் வராததை அடுத்து, அவர்கள் சென்று பார்த்த பின்னரே அவளது உடல் மடக்குமேசையில் சிக்கிக்கொண்டது தெரியவந்தது.

அச்சிறுமி இறந்தது குறித்து மருத்துவமனையிலிருந்து தகவல் கிட்டிய பின்னரே காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்ததாக சினார் ஹரியான் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

அதனைத் தொடர்ந்து, காவல்துறையின் தடயவியல் பிரிவினரும் விசாரணை அதிகாரி ஒருவரும் அச்சிறுமியின் வீட்டிற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

பேராக்கில் உள்ள ஒரு மருத்துவமனையில் உடற்கூறாய்வு மேற்கொள்ளப்படும் என அறியப்படுகிறது.

இதனிடையே, சிறுமியின் உயிரிழப்பை உறுதிப்படுத்திய பினாங்கு காவல்துறைத் தலைவர் ஹம்சா அகமது, அதன் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாஉயிரிழப்புபினாங்கு