ஜோகூர் கடற்பாலத்தில் சறுக்குப்பலகை சவாரி

2 mins read
09074709-fe3c-4bf3-a2e1-58dd02e16c2a
மழையில் ஒரு பெண் கடற்பாலத்தைக் கடப்பதை ஒரு காணொளி காட்டிய தருணத்தில், திடீரென ஒருவர் சறுக்குப்பலகையில் (வலது) தோன்றினார். - படம்: ஓரியன்டல் டெய்லி

கடந்த புதன்கிழமை (மார்ச் 19) சிங்கப்பூரிலிருந்து ஜோகூர் பாருவுக்குச் சென்ற ஒருவர், சறுக்குப்பலகையைப் பயன்படுத்தி ஜோகூர் கடற்பாலத்தைக் கடந்தார்.

இது சிங்கப்பூரிலும் ஜோகூரின் சில பகுதிகளிலும் 24 மணிநேரமாகப் பருவமழை தொடர்ந்து பெய்துகொண்டிருந்தபோது நிகழ்ந்தது.

புதன்கிழமை மாலை உட்லண்ட்சிலும் ஜோகூர் பாருவிலும் உள்ள சுங்கச் சாவடிகளில் மழையால் ஏற்பட்ட நெரிசல் காரணமாக குழப்பமான காட்சிகள் பல அரங்கேறின.

பேருந்தில் ஏற முயன்றபோது பயணிகள் தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதைக் காண முடிந்தது.

எல்லையைத் தாண்டுபவர்கள் இரவு 10 மணி வரை கூட பேருந்து நிறுத்தங்களில் நிரம்பியிருந்தனர். மேலும் பேருந்தில் ஏற 90 நிமிடங்களுக்கும் மேலாக வரிசையில் காத்திருந்தனர் என்று மலேசிய ஊடகமான ஓரியன்டல் டெய்லி புதன்கிழமை (மார்ச் 19) இரவு செய்தி வெளியிட்டது.

எல்லையைத் தாண்டியவர்கள் பெரும்பாலும் சிங்கப்பூரில் வேலை முடிந்து இரவு வீடு திரும்பும் மலேசியர்களாக இருந்தார்கள். ஆனால், சிலர் மழையில் நடந்தே கடற்பாலத்தைக் கடக்க முடிவுசெய்தனர்.

புதன்கிழமை இரவு 8.40 மணியளவில் ஒருவர் கடற்பாலச் சாலையில் சறுக்குப்பலகையில் சென்றுகொண்டிருந்ததைக் காண முடிந்தது.

கடற்பாலத்தின் இரு திசைகளிலும் சாலையோரத்தில் நடந்து செல்ல அனுமதிக்கப்படுகிறது. ஆனால், சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் உள்ள இரண்டு குடிநுழைவு வளாகங்களுக்கு இடையே முறையான நடைபாதை இல்லை.

சிங்கப்பூர் பக்கத்திலிருந்து நடைபாதை பாதியிலேயே முடிகிறது. நடந்து செல்பவர்கள் மலேசியாவுக்குச் செல்ல சாலையின் ஓரத்தில் செல்ல வேண்டும்.

சிங்கப்பூர் பக்கத்திலிருந்து நடைபாதை பாதியிலேயே முடிகிறது. நடந்து செல்பவர்கள் மலேசியாவுக்குச் செல்ல சாலையின் ஓரத்தில் செல்ல வேண்டும்.

மழையில் ஒரு பெண் கடற்பாலத்தைக் கடப்பதை ஒரு காணொளி காட்டிய தருணத்தில், திடீரென ஒருவர் சறுக்குப்பலகையில் தோன்றினார்.

கருநிற, நீண்ட கைச்சட்டை, ஜீன்ஸ் அணிந்திருந்த அந்தச் சறுக்குப்பலகை நபர், வாகனங்களுக்கு இடையிடையே புகுந்து சென்றுகொண்டிருந்தார்.

சறுக்குப்பலகை நபரின் தலைக்கவசத்தின் பின்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த ஓர் ஒளிரும் எச்சரிக்கை விளக்கு, மற்ற வாகன ஓட்டிகளுக்கு அவர் பயணம் செய்வதைக் காட்ட உதவியது.

அவர் எந்த வேகத்தில் பயணம் செய்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் அவரைப் படம் பிடித்த வாகனம், அவர் மணிக்கு 6 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே நகர்வதைக் காட்டியது.

இப்படியாக, பலர் போக்குவரத்து நெரிசலில் சிக்கியும், சிலர் நடந்தும், சிலர் ஓடியும், சிலர் இவ்வாறாக சறுக்குப்பலகையில் சென்றும் கடற்பாலத்தைக் கடந்து மலேசியாவுக்குச் சென்றனர்.

குறிப்புச் சொற்கள்