ஜோகூர் பாருவில் ஏற்பட்ட கார் விபத்து ஒன்றில் வாடகை காரை ஓட்டியவரும் அதிலிருந்த சிங்கப்பூர் பயணியும் மாண்டனர். அவர்கள் பயணம் செய்த கார் லாரிமீது மோதியது.
ஜூலை 20ஆம் தேதி காலை 11.27 மணியளவில் விபத்து நேர்ந்திருக்கக்கூடும் என்று நம்பப்படுவதாக வடக்கு ஜோகூர் பாரு வட்டாரக் காவல்துறைத் தலைவர் துணை ஆணையர் பல்வீர் சிங் கூறினார். அந்த கார் ஜோகூர் பாருவிலிருந்து ஸ்கூடாய் நோக்கிச் சென்றபோது விபத்து நேர்ந்ததாகக் கூறப்படுகிறது.
“காரை ஓட்டிய 48 வயது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து லாரிக்குப் பின் இடது புறத்தில் மோதியது விபத்துக்கான காரணம் என்று நம்பப்படுகிறது. தலையில் பலத்த காயமடைந்த ஓட்டுநர் சம்பவ இடத்தில் மாண்டார்,” என்று திரு சிங் சொன்னார்.
இதற்கிடையே, தலையில் படுகாயமடைந்த சிங்கப்பூரைச் சேர்ந்த 27 வயது பயணி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சம்பவத்தில் தொடர்புடைய 28 வயது லாரி ஓட்டுநர் காயமின்றித் தப்பினார்.
கவனக்குறைவாகவும் ஆபத்தான வகையிலும் காரை ஓட்டி மரணம் விளைவித்ததாக சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின்கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுவதாகத் திரு சிங் குறிப்பிட்டார்.

