மியன்மார் முன்னாள் அதிபரின் விடுதலையால் சிறிய நம்பிக்கை

மியன்மார் முன்னாள் அதிபரின் விடுதலையால் சிறிய நம்பிக்கை

2 mins read
bcc2c9b2-966c-4f68-80b3-8824210f500d
2021ஆம் ஆண்டு மே மாதத்தில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட மியன்மாரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூச்சி (இடது), அதிபர் வின் மியிண்ட். - கோப்புப் படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

யங்கோன்: மியன்மாரில் ஆட்சிக்கவிழ்ப்பால் பதவியிலிருந்து அகற்றப்பட்ட முன்னாள் அதிபரின் விடுதலை, தடுத்து வைக்கப்பட்டுள்ள தலைவர் ஆங் சான் சூச்சியின் நிலை என்னவாகுமோ என்பதைப் பற்றிய யூகங்களைத் தூண்டியுள்ளது.

ஆனால், ஜனநாயகம் மீண்டும் திரும்புவதை எதிர்பார்த்துக் காத்திருக்கும் குடிமக்கள் மற்றும் ஆய்வாளர்களிடையே இது பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை.

“இந்த விடுதலையிலிருந்து நான் பெரிதாக எதையும் எதிர்பார்க்கவில்லை,” என்று பாதுகாப்பு காரணங்களுக்காகத் தன் பெயரை வெளியிட விரும்பாத, யங்கோனைச் சேர்ந்த 50 வயது நபர் ஒருவர் கூறினார்.

“நன்றி சொல்வதற்கு எந்தக் காரணமும் இல்லை, ஏனென்றால், அவர் அநியாயமாகக் கைது செய்யப்பட்டார்,” என்றார் அவர்.

2021ல் நடந்த ஓர் ஆட்சிக்கவிழ்ப்பில், மியன்மாரின் ராணுவம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூச்சியின் அரசாங்கத்தைக் கவிழ்த்து, அமைதிக்கான நோபெல் பரிசு பெற்றவரையும், நியமிக்கப்பட்ட அதிபர் வின் மியிண்ட் உள்ளிட்ட மூத்த உதவியாளர்களையும் கைது செய்தது.

கடந்த வாரம் நாட்டின் அதிபராகப் பதவியேற்பதற்கு முன்பு ஐந்து ஆண்டுகள் ராணுவத் தளபதியாக ஆட்சி செய்த, மின் ஆங் ஹ்லாயிங் தலைமையிலான, புதிய அரசாங்கத்தால், ஏப்ரல் 17ஆம் தேதி அன்று அவருக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு இதுவரையிலான மிகப்பெரிய சலுகையாகக் கருதப்படுகிறது.

80 வயதான திருவாட்டி சூச்சி விரைவில் விடுவிக்கப்படுவாரா அல்லது வீட்டுக் காவலுக்கு மாற்றப்படுவாரா என்ற கேள்வியை இந்த விடுதலை எழுப்பியுள்ளது.

“இது நிச்சயமாக ஒரு சாத்தியம்தான்,” என்று அனைத்துலக உத்திபூர்வ ஆய்வுக் கழகத்தின் ஆய்வாளர் மோர்கன் மைக்கல்ஸ் கூறினார். அதே சமயம், “இத்தகைய நடவடிக்கைகளை, அமைதி அல்லது நல்லிணக்கத்தை நோக்கிய ஓர் உண்மையான திருப்பமாகத் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது” என்றும் அவர் எச்சரித்தார்.

ஏப்ரல் 17ஆம் தேதியன்றோ அல்லது சனிக்கிழமை (ஏப்ரல் 18) காலையிலோ, யங்கோனில் உள்ள திருவாட்டி சூச்சியின் குடும்ப மாளிகையில் எந்தப் பாதுகாப்பும் குவிக்கப்படவில்லை என்பதை ஏஎஃப்பி செய்தியாளர்கள் கண்டனர். இது, அவர் பரந்து விரிந்த, ராணுவ ஆதிக்கம் நிறைந்த தலைநகரான நேப்பிடோவிலேயே தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்பதை உணர்த்துகிறது.

“இன்னும் அவரை அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்கான எந்த அறிகுறியும் இல்லை,” என்று, கலைக்கப்பட்ட அவரது தேசிய ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஒரு வட்டாரம், சனிக்கிழமை (ஏப்ரல் 18) அன்று ஏஎஃப்பியிடம் பெயர் குறிப்பிடாமல் கூறியது.

குறிப்புச் சொற்கள்
மியன்மார்ஆங் சான் சூச்சிராணுவம்