தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆழ்கடல் ஆய்வில் சிங்கப்பூர் ஆய்வாளர்கள்: டாக்டர் விவியன்

3 mins read
7bbfe7f4-5a2b-4539-8b13-d351ffb75e75
உலகின் பிற பகுதிகளைச் சேர்ந்த ஆய்வாளர்களால் பவளப்பாறைகள் நன்கு ஆய்வு செய்யப்பட்டுள்ளன. - படம்: ஏஎஃப்பி

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக (என்யுஎஸ்) ஆய்வார்கள் அக்டோபர் மாதம் இந்தியப் பெருங்கடலின் கிழக்குப் பகுதியில் ஆழ்கடல் ஆய்வைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவைத் தலைமையிடமாகக்கொண்ட இலாப நோக்கமற்ற ஓஷன்எக்ஸ் (OceanX) எனும் அமைப்புடன் இணைந்து அந்த ஆய்வுப் பயணத்தை அவர்கள் மேற்கொள்வர். அந்த ஆய்வு இந்த வட்டாரத்தைச் சேர்ந்த அறிவியல் அறிஞர்களை, குறிப்பாக வளர்ந்து வரும் பிற சிறிய தீவுகளின் அறிவியல் அறிஞர்களை ஒன்றிணைக்கும் என்றார் டாக்டர் விவியன்.

பிரான்சின் நீஸ் நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் பெருங்கடல் மாநாட்டில் சிங்கப்பூர் தேசிய அறிக்கையை அவர் வழங்கினார்.

“இது ஆழ்கடல் உயிரியலை ஆவணப்படுத்தவும், ஆய்வு செய்யவும் (ஆய்வாளர்கள்) ஒரு வாய்ப்பை வழங்கும்,” என்றார் அவர். மேலும் அந்த ஆய்வு பெருங்கடல்களைப் பற்றிய புரிதலை ஆழப்படுத்த உதவும் என்றும் குறிப்பிட்டார்.

கடல் அறிவியல் கல்வி, திறன் மேம்பாட்டை மேம்படுத்தும் உலகளாவிய இலக்குகளுக்கு இந்த ஆய்வுப் பயணம் பங்களிக்கும் என்று சிங்கப்பூர் நம்புவதாக அமைச்சர் விவியன் தெரிவித்தார்.

இந்தியப் பெருங்கடல் என்பது தென்கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்க கண்டத்திற்கு இடையிலான நீர்ப்பரப்பாகும். பெருங்கடலின் மூன்றில் இரண்டு பங்குப் பகுதியை உள்ளடக்கிய ஆழ்கடல், தேசிய எல்லைகளுக்கு வெளியே உள்ள கடல் பகுதிகளைக் குறிக்கிறது. சிறிய வளர்ந்து வரும் தீவு நாடுகள் கடல் தொடர்பான அறிவியல் ஆய்வுகளில் பங்கேற்பது மட்டுமன்றி வழிநடத்தவும் வேண்டும் மாநாட்டின் முதல் நாளான ஜூன் 9 அன்று டாக்டர் விவியன் கூறினார். 

அதன்மூலம், அந்நாடுகள் சார்ந்திருக்கும் கடல் துறையை அவற்றால் நன்கு புரிந்துகொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் சார்பில் அம்மாநாட்டில் கலந்துகொண்டுள்ள அமைச்சர் விவியன், கடல் சுகாதாரத்திற்கான அறிவியல் ஒத்துழைப்பின் அவசியம் குறித்து ஏவோசிஸ் (Aosis) எனப்படும் சிறிய தீவு நாடுகள் கூட்டணி சார்பாகப் பேசினார். சிங்கப்பூர், பலாவ், மாலத்தீவு, பெலிஸ் உள்ளிட்ட 39 நாடுகள் அதில் உறுப்பினர்களாக உள்ளன.

அதிகார வரம்பிற்குட்பட்ட கடல் பகுதியில் 30 விழுக்காடு சிறிய தீவு நாடுகளின் வசமுள்ளது என்றாலும், கடந்த பத்து ஆண்டுகளாக ஐக்கிய நாட்டுச் சபை நடத்திவரும் கடல் சுகாதாரம் தொடர்பான செயல் திட்டங்களில் 0.3 விழுக்காடு மட்டுமே அவை முன்னிலை வகிப்பதாக டாக்டர் விவியன் தெரிவித்தார்.

“சிறிய தீவு நாடுகள் அரிதாகவே ஆய்வுக்கு முன்னிலை வகிக்கின்றன. சொந்த கடல் பகுதியின் தரவுகளுக்குச் சில நாடுகள் மட்டுமே உரியவர்களாக உள்ளன. அச்சூழலை மாற்ற வேண்டிய காலம் வந்துவிட்டது என நாங்கள் நம்புகிறோம்,” என்றார் அவர்.

193 ஐநா உறுப்பு நாடுகளை ஒன்றிணைக்கும் உச்சநிலைக் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர், வெப்பநிலை அதிகரிப்பு, அமிலத்தன்மை, அளவுக்கு அதிகமாக மீன்பிடித்தல், பிளாஸ்டிக் மாசுபாடு ஆகியவற்றால் பெருங்கடல் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதைச் சுட்டினார்.

“தாழ்வான கடலோர நகரமாக, கடல் மட்டம் உயர்வு, கடலோர அரிப்பு, வெள்ள அபாயம் ஆகியவற்றால் சிங்கப்பூர் ஆபத்தை எதிர்நோக்குகிறது,” என்று அவர் கூறினார்.

“கடல் அறிவியல் ஆடம்பரமானது அல்ல. மாறாக, சிறிய தீவு நாடுகளாக இருக்கும் நமக்கு அது மிகவும் அத்தியாவசியமானது. நமது சமூக, கலாசார, சுற்றுச்சூழல் அமைப்புகளும் உணவுப் பாதுகாப்பு, நல்வாழ்வு ஆகியவையும் செழிப்பான கடலையே சார்ந்துள்ளது,” என அமைச்சர் விவியன் கடல் சுகாதாரத்தின் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.

ஜூன் 13ஆம் தேதிவரை நடைபெறும் இம்மாநாடு பெருங்கடல், கடல் வளங்களின் பாதுகாப்பு போன்றவற்றிற்கான நிலையான பயன்பாட்டு ஆதரவை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகிறது.

குறிப்புச் சொற்கள்