டெக்சஸ்: நெடுஞ்சாலையில் தரையிறங்கிய சிறுவிமானம், மூன்று கார்கள்மீது மோதிய சம்பவம் அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் கடந்த புதன்கிழமை (டிசம்பர் 11) நேர்ந்தது.
ஒரு விமானி மட்டுமே இருந்த அவ்விமானம் ஹுஸ்டனுக்குத் தென்மேற்கே 240 கிலோமீட்டர் தொலைவில் விக்டோரியாவில் உள்ள ஒரு பாலத்திற்கு அருகே பிற்பகல் 3 மணியளவில் தரையிறங்கி விபத்திற்குள்ளானது.
இதில் மூன்று கார்கள் சேதமடைந்ததாகக் காவல்துறையின் ஃபேஸ்புக் பதிவு தெரிவித்தது. மோதிய வேகத்தில் விமானம் இரண்டாக உடைந்ததையும் அதில் ஒரு பகுதி ஒரு கார்மீது இருந்ததையும் படங்கள் காட்டின.
இவ்விபத்தில் மூவர் லேசான காயமுற்றதாகவும் இன்னொருவர் மேல்சிகிச்சைக்காக வேறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்தது.
“இது எல்லா நாளும் பார்க்கக்கூடியதன்று. ஆயினும், மோசமான விபத்து நேராதது மகிழ்ச்சி அளிக்கிறது. காயமுற்றவர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி வருகின்றனர்,” என்று விக்டோரியா காவல்துறைத் துணைத் தலைவர் எலீன் மோயா கூறினார்.
விமானி குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. அவரும் மருத்துவ மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, இவ்விபத்து குறித்து கூட்டரசு விமானப் போக்குவரத்து அமைப்பு விசாரித்து வருகிறது.

