டொரோன்டோ, கனடா: சிறிய விமானம் ஒன்று கடத்தப்பட்டதாக மத்தியக் காவல்துறைக்குக் கிடைத்த புகாரை அடுத்து கனடாவின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்று செயல்பாடுகளைத் தற்காலிகமாக நிறுத்தியது.
வென்கூவர் ஐலண்ட் பகுதியில் கடத்தப்பட்ட விமானம் வென்கூவர் அனைத்துலக விமான நிலையத்திற்கு அருகே பறப்பதாக உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.10 மணிக்கு ராயல் கனடியன் மவுண்டட் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.
விமானத்தில் அப்போது சந்தேக நபர் ஒருவர் மட்டும்தான் இருந்ததாக காவல்துறை அறிக்கை குறிப்பிட்டது.
பிற்பகல் 1.45 மணிக்கு வென்கூவரில் தரையிறங்கிய விமானத்திலிருந்து சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டார்.
அரசாங்க ஒளிபரப்பு நிறுவனம் சிபிசி வெளியிட்ட படங்களில் வென்கூவரில் தரையிறங்கிய சிறிய செஸ்னா விமானத்தைப் பாதுகாப்பு வாகனங்கள் சுற்றி வளைத்திருந்தன.
வென்கூவர் தீவின் விக்டோரியாவில் உள்ள விமான மன்றம், செஸ்னா விமானத்தைச் செயல்படுத்துவதாக சிபிசி சொன்னது.
சம்பவத்தின்போது விமான நிலையத்தின் செயல்பாடுகளைத் தற்காலிகமாக நிறுத்திய வென்கூவர் அனைத்துலக விமான நிலையம், 9 உள்நாட்டு விமானங்கள் திசை மாற்றப்பட்டதாகக் கூறியது.

